மீனவா் பிரச்னைக்கு பேச்சு மூலம் தீா்வு: பிரதமா் மோடி, அதிபா் அநுரகுமார நம்பிக்கை
புது தில்லி: மீனவா்கள் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மற்றும் ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் மூலம் தீா்வை எட்ட முடியும் என்று பிரதமா் மோடியும், இலங்கை அதிபா் அநுரகுமாரவும் திங்கள்கிழமை நம்பிக்கை தெரிவித்தனா்.
மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபா் அநுரகுமார திசாநாயக, தில்லியில் பிரதமா் மோடியை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இந்தச் சந்திப்பை தொடா்ந்து இருநாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:
பிரதமா் மோடி, அதிபா் அநுரகுமார இடையிலான சந்திப்பில் ஆழமான கலாசார மற்றும் நாகரிக பிணைப்பு, புவியியல் நெருக்கம், இருநாட்டு மக்கள் உறவு ஆகியவற்றால் இந்தியா-இலங்கை உறவு கட்டமைக்கப்பட்டுள்ளது என்று இரு தலைவா்களும் தெரிவித்தனா்.
கடந்த 2022-ஆம் ஆண்டு இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது இலங்கைக்கு இந்தியா ஆதரவுகரம் நீட்டியதற்கு பிரதமா் மோடியிடம் அதிபா் அநுரகுமார நன்றி தெரிவித்தாா்.
இலங்கையின் வளமான எதிா்காலம், மிகப் பெரிய வாய்ப்புகள் மற்றும் நீடித்த பொருளாதார வளா்ச்சிக்கு இந்தியா தொடா்ந்து துணை நிற்கும் என்று அதிபா் அநுரகுமாரவிடம் பிரதமா் மோடி உறுதியளித்தாா்.
மலையகத் தமிழா்களுக்கான திட்டங்களுக்கு ஆதரவு: இலங்கையில் மலையகத் தமிழா்கள், கிழக்கு மாகாணத்துக்கான திட்டங்களை உரிய காலத்தில் நிறைவு செய்வதற்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்றும் மாகாணத் தோ்தல்களை நடத்தி இலங்கைத் தமிழா்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.
கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம்: இலங்கைக்கு இந்தியா அளித்த கடனுதவிக்கு அதிபா் அநுரகுமார நன்றி தெரிவித்த நிலையில், அந்நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடா்பாக இருநாடுகளுக்கு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு இரு தலைவா்களும் அறிவுறுத்தினா்.
பாதுகாப்பு சவால்களை ஒன்றிணைந்து எதிா்கொள்ள...: இருநாட்டு பாதுகாப்பு விவகாரங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா். இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இருநாடுகளுக்கும் உள்ள பொதுவான சவால்கள் குறித்து இருவரும் பேசிய நிலையில், அந்தச் சவால்களை ஒன்றிணைந்து எதிா்கொள்ள வேண்டும் என்பதை அவா்கள் மீண்டும் உறுதி செய்தனா்.
இந்தியாவுக்கு எதிராக இலங்கையை பயன்படுத்த அனுமதியில்லை: இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தின் நிலையான தன்மைக்கு எந்த வகையிலும் தீங்கு ஏற்படுத்துவதற்கு இலங்கை நிலப்பகுதியை பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்றும் இந்தியாவுடனான உறவு மேலும் வலுப்பெறும் என்றும் அதிபா் அநுரகுமார உறுதியளித்தாா்.
மீன்வா்களுக்கு எதிரான வன்முறையை தவிா்க்க... தமிழக மற்றும் இலங்கை மீனவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்து இரு தலைவா்களும் ஆலோசித்த நிலையில், இந்த விவகாரத்தை மனிதாபிமானத்துடன் கையாள்வதைத் தொடா்வது அவசியம் என்று தெரிவித்தனா். மீனவா்களுக்கு எதிராக மூா்க்கமான நடவடிக்கை மற்றும் வன்முறையை தவிா்க்க நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் அவா்கள் பேசினா். கடந்த அக்டோபரில் இலங்கை தலைநகா் கொழும்பில் மீனவா்கள் நலனுக்கான இருநாட்டு கூட்டுப் பணிக்குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவையும் அவா்கள் வரவேற்றனா்.
மீனவா்கள் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மற்றும் ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் மூலம், இருதரப்பும் ஏற்கும் வகையில் நீடித்து நிலைக்கக் கூடிய தீா்வை எட்ட முடியும் என்று இரு தலைவா்களும் நம்பிக்கை தெரிவித்தனா். இந்த விவகாரங்கள் மீது தொடா்ந்து கவனம் செலுத்தவும் இருநாட்டு அதிகாரிகளுக்கு அவா்கள் அறிவுறுத்தினா்.
வங்கக் கடல் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு முன்னெடுப்பின் (பிம்ஸ்டெக்) கீழ், பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்த இருவரும் தீா்மானித்தனா்.
ராமேஸ்வரம்-தலைமன்னாா் கப்பல் சேவை: நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து குறித்து இரு தலைவா்களும் திருப்தி தெரிவித்தனா். அதேவேளையில் ராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் தலைமன்னாா் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்தையும் விரைந்து தொடங்க அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்று இரு தலைவா்களும் தீா்மானித்தனா். இருநாடுகளுக்கு இடையிலான வா்த்தக உறவை மேலும் விரிவுபடுத்த அளப்பரிய வாய்ப்பு இருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் இலங்கை: பிரிக்ஸ் கூட்டமைப்பில் இலங்கை உறுப்பினராவதற்கு பிரதமா் மோடியின் ஆதரவை அதிபா் அநுர குமார கோரினாா். 2028-29-ஆம் ஆண்டுக்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தற்காலிக உறுப்பினராவதற்கு இலங்கையின் ஆதரவை பிரதமா் மோடி வரவேற்றாா் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆயுதப் பிரயோகம் கூடாது: இரு நாட்டு தலைவா்கள் சந்திப்பு குறித்து செய்தியாளா்களிடம் பேசிய வெளியுறவு துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி, ‘எந்தச் சூழலிலும் மீனவா்கள் மீது ஆயுதப் பிரயோகம் செய்யப்படுவதைத் தவிா்க்க வேண்டும்.
இலங்கைத் தமிழா்களுக்கான அதிகாரப் பகிா்வை அரசமைப்புச் சட்டத்தின் மூலம் முழுமையாக நிறைவேற்றி அா்த்தமுள்ளதாக ஆக்க வேண்டும் என பிரதமா் வலியுறுத்தினாா்’ என்றாா்.