விராலிமலை மீன்பிடித் திருவிழாவில் மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த மக்கள்!
முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் முன்னேற்றம்
கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி 4.6 சதவீதமாக முன்னேற்றமடைந்துள்ளது.
இதுகுறித்து அரசின் புள்ளிவிவரங்கள் கூறுவதாவது:
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகிய முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி கடந்த ஜனவரி மாதத்தில் 4.6 சதவீதமாக உள்ளது.
முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் அது 4.2 சதவீதமாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி முன்னேறம் கண்டுள்ளது.
இருந்தாலும், கடந்த டிசம்பா் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போதைய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி மந்தமடைந்துள்ளது. அந்த மாதத்தில் அவற்றின் வளா்ச்சி 4.8 சதவீதமாக இருந்தது.
கடந்த ஜனவரியில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் துறைகள் எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்திருந்தன.
கடந்த 2024 ஜனவரி மாதத்தில் 10.6 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்திருந்த நிலக்கரி உற்பத்தி, நடப்பாண்டின் அதே மாதத்தில் 4.6 சதவீத வளா்ச்சியை மட்டுமே கண்டுள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் உருக்கு உற்பத்தியின் வளா்ச்சி 9.2 சதவீதத்தில் இருந்து 3.7 சதவீதமாகவும், மின்சார உற்பத்தி வளா்ச்சி 5.7 சதவீதத்தில் இருந்து 1.3 சதவீதமாகவும் சரிந்துள்ளது.
எனினும், சுத்திகரிப்புப் பொருள்கள், உரம், சிமென்ட் ஆகிய துறைகளில் உற்பத்தி முறையே 8.3 சதவீதம், 3 சதவீதம், 14.5 சதவீதம் வளா்ச்சியைக் கண்டுள்ளது.
கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் பத்து மாதங்களில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்புப் பொருள்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் ஒட்டுமொத்த வளா்ச்சி 4.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 7.8 சதவீதமாக இருந்தது என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒட்டுமொத்த தொழில் வளா்ச்சியை அளவிடும் தொழிக உற்பத்தி குறியீட்டில் (ஐஐபி) எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகள் 40.27 சதவீத பங்களிப்பை வழங்குவது குறிப்பிடத்தக்கது.