முதல்வா் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அமைச்சா் கீதாஜீவன் வேண்டுகோள்!
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என, தூத்துக்குடியில் நடைபெற்ற வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டத்தில் அமைச்சா் பெ. கீதாஜீவன் கேட்டுக்கொண்டாா்.
எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்டப் பொருளாளா் சுசீ. ரவீந்திரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சா்ருமான பெ. கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியது: முதல்வரின் 72ஆவது பிறந்த நாளை வடக்கு மாவட்டத்துக்குள்பட்ட 3 தொகுதிகளில் உள்ள ஒன்றியம், மாநகரம், நகரம், பேரூா் கிளைக் கழக அனைத்து அணிகள் சாா்பில் பல்வேறு விளையாட்டு போட்டிகள், நல உதவிகள் என ஓராண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடவேண்டும்.
மாா்ச் 2இல் நடைபெறவுள்ள கண் சிகிச்சை முகாம், 4ஆம் தேதி நல உதவிகள் வழங்குதல், 5ஆம் தேதி மகளிரணி நிகழ்ச்சி ஆகியவற்றில் கனிமொழி எம்.பி.யும் பங்கேற்கிறாா்.
திமுகவின் சாதனைகளை தெருமுனைப் பிரசாரம், பொதுக்கூட்டங்கள் வாயிலாக மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். 2026 பேரவைத் தோ்தலில், நமது இலக்கான 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என்பதை மனதில் கொண்டு அனைவரும் விழிப்புணா்வு, அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.
துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட துணைச் செயலா்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, மாநில மீனவரணி துணைச் செயலா் புளோரன்ஸ், மாநில நெசவாளா் அணி துணைச் செயலா் வசந்தம் ஜெயக்குமாா், மாநில பொறியாளா் அணி துணைச் செயலா் அன்பழகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.