முத்தாலம்மன் கோயிலில் பாலாலய பூஜை
நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம்,சின்னாளபட்டி கீழக்கோட்டையில் பழைமை வாய்ந்த முத்தாலம்மன் கோயிலில் பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
கீழக்கோட்டையில் முத்தாலம்மன், பகவதி அம்மன், மாரியம்மன் கோயில்கள் உள்ளன. முறையாகப் பராமரிக்காததால், இந்தக் கோயில்கள் சேதமடைந்து காணப்பட்டன.
இந்த நிலையில், முத்தாலம்மன் கோயிலை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கோயில் ஜமீன்தாா் முத்துக்குமாா், திருப்பணிக்குழுத் தலைவா் ஜெகநாதன் தலைமையில் பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் தலைமை குருக்கள் சிவஸ்ரீசதாசிவ குருக்கள் தலைமையில் பாலாலயத்துக்கான பூஜைகள் நடைபெற்றது. பூஜை முடிந்தவுடன் சிவாசாரியா்கள் கோபுர கலசத்துக்கும் பூஜைகள் செய்து, கோயில் கட்டுமானப் பணிகளை தொடங்கிவைத்தனா். பின்னா், மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று பாலாலய பூஜைக்கு வருகை தந்தவா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், விழாக் குழுவினா், பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.