தினமும் 'ஒரு பீர்' அளவிலான ஆல்கஹாலை உட்கொள்ளும் சிம்பன்சிகள் - ஆய்வில் வெளிவந்த ...
முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!
கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஒரு மோசடி கும்பல் ஹேக் செய்து ரூ. 3 லட்சத்தைத் திருடியுள்ளது தெரியவந்துள்ளது.
இணையவழி மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை இதில் சிக்கிக் கொள்கின்றனர். இதுகுறித்த விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் குற்றங்கள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு ரூ. 3 லட்சம் திருடுபோயுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி பெங்களூருவில் ஆர்.எம்.வி. எக்ஸ்டென்ஷனில் உள்ள பிபிஎம்பி பூங்காவில் 75 குடிமைப் பணியாளர்கள் கௌரவிக்கும் நிகழ்ச்சியில் நேற்று(செப். 17) இந்த சம்பவம் குறித்து கௌடா பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், "இன்று காலை எனது மொபைல் போனை பார்க்கும்போது எனது மூன்று வங்கிக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது தெரிந்தது. ஒவ்வொரு வங்கிக் கணக்கிலிருந்து தலா சுமார் ரூ.1 லட்சம் டெபிட் ஆனது. அதன்படி ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கிக் கணக்குகளில் இருந்து யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் மூலம் ஹேக்கர்கள் ரூ. 3 லட்சம் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து நான் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளிப்பேன்" என்று கூறினார்.
அரசும் காவல்துறையும் சைபர் குற்றங்களைத் தடுக்க முயற்சித்து வருகிறது. எனினும் இணையவழி குற்றங்கள் ஆபத்தான அளவில் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றங்கள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் எதிர்காலத்தில் மிகப்பெரிய நிதிக் கொள்ளைச் சம்பவங்கள் நிகழக் கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
முன்னதாக கன்னட நடிகர் உபேந்திரா மற்றும் அவரது மனைவி பிரியங்காவின் மொபைல்போன்களை இணைய மோசடி கும்பல் ஹேக் செய்து, அவர்களது போனில் உள்ள தொடர்புகளில் இருந்து ரூ. 55,000 மோசடி செய்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்றும் நீங்கள் குற்றம் செய்ததாகக் கூறி ஆன்லைனிலேயே பல மணி நேரம் இருக்க வைத்து பணத்தை பரிமாற்றம் செய்யும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.
டிஜிட்டல் அரெஸ்ட் அல்லது இணையவழி மோசடிகளுக்கு 1930 அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்