ஐஐடியில் 28 அரசுப் பள்ளி மாணவர்கள்: "திராவிட மாடல் அரசின் பொய்" - என்ன சொல்கிறார...
மும்பை: முதல் பிறந்தநாள், கேக் வெட்டிய சில மணி நேரத்தில் சோகம்; கட்டிடம் இடிந்து 14 பேர் உயிரிழப்பு
மும்பையில் கடந்த இரண்டு வாரமாக கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது.
மும்பை அருகே உள்ள விராரில், விஜய் நகரில் இருக்கும் ரமாபாய் அபார்ட்மெண்ட் என்ற நான்கு மாடி கட்டிடம் நேற்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது.
கட்டிடத்தின் பின்பகுதி இடிந்து, கட்டிடத்திற்கு கீழே இருந்த குடிசை வீடுகள் மீது விழுந்தது.
கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். தேசிய பேரிடர் மீட்பு படையும், தீயணைப்பு துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
கட்டிடம் மிகவும் நெருக்கடியான இடத்தில் இருந்ததால் ஜே.சி.பி. இயந்திரங்களை உள்ளே கொண்டு செல்ல முடியவில்லை.

ஆரம்பத்தில் ஒரு குழந்தை உட்பட 2 பேர் மட்டுமே இதில் இறந்ததாக செய்தி வெளியானது. ஆனால் இடிந்த பகுதிக்குள் இயந்திரங்களை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டதால், மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டவர்கள் உயிரிழந்தனர்.
மீட்பு பணிகள் முழுமையாக முடிந்த போது இறந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. மீட்பு பணிகள் 30 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.
ஒரு வயது குழந்தை உத்கர்ஷா ஜோயலும், அவரது தாயார் அரோஹியும் கட்டிட இடிபாடுகளில் மண்ணில் புதைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்டிடம் இடிந்து விழுந்த அன்று இரவு, உத்கர்ஷாவிற்கு முதல் பிறந்தநாளை கொண்டாடி இருந்தனர். அங்கு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கட்டப்பட்ட பலூன்கள் கூட அப்படியே இருந்தது.
கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சில மணி நேரத்தில் தாயும் மகளும் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் புதைந்தனர்.

இதில் குழந்தையின் தந்தை ஓம்காரும் அங்குதான் இருந்துள்ளார். அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. இடிபாடுகள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை.
2012-ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கட்டிடத்தில் 51 வீடுகள் இருந்தது. விசாரணையில், இக்கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கட்டிடத்தை கட்டிய பில்டர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டிடத்தில் அதிகமான வீடுகள் காலியாக இருந்தது. அனைத்து வீட்டிலும் மக்கள் இருந்திருந்தால் இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கப்போகும்.