நாட்டின் சட்டக்கல்வி வலுப்பெற வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
மும்பை: குண்டும் குழியுமான சாலையால் பலியான உயிர்; நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு; பின்னணி என்ன?
மும்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் சமீபத்தில் தொடர்ச்சியாகப் பெய்த மழையால் சாலை முழுக்க குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடக்கின்றன.
மும்பை அருகில் உள்ள பிவாண்டி என்ற இடத்தில் டாக்டர் நசீம் அன்சாரி என்பவர் தனது க்ளினிக்கில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுக்கொண்டிருந்தார். இரவு வஜ்சர்பட்டி நாக்கா அருகே வந்தபோது சாலையில் இருந்த குழியில் இருசக்கர வாகனம் ஏறி இறங்கியது. இதனால் நிலை தடுமாறி டாக்டர் அன்சாரி சாலையில் விழுந்தார். அந்நேரம் அந்த வழியாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று அவர் மீது ஏறிச்சென்றது.

இதில் சம்பவ இடத்திலேயே அன்சாரி இறந்து போனார். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து நடந்த சாலையை இப்போது அதிக அளவில் லாரிகள் பயன்படுத்தி வருகின்றன. அருகில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் மேம்பாலத்தில் பழுதுபார்ப்புப் பணிகள் நடப்பதால் அனைத்து லாரிகளும் விபத்து நடந்த சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன.
சாலையில் இருக்கும் குண்டு குழிகள் காரணமாக அடிக்கடி மும்பையில் விபத்துகள் ஏற்படுவதால் உடனே குண்டு குழிகளைச் சரி செய்யும்படி மாநகராட்சி கமிஷனர் புஷனுக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சாலையில் உள்ள குண்டு குழிகளை உடனே சரி செய்ய சம்பந்தப்பட்ட வார்டு அதிகாரிகளுக்கு கமிஷனர் புஷன் உத்தரவிட்டு இருக்கிறார்.
மும்பையில் குண்டு குழியுமான சாலைகளுக்கு முடிவு கட்ட மும்பை முழுவதும் இருக்கும் 2000 கிலோமீட்டர் சாலைகளும் காங்கிரீட் மயமாக்கப்படும் என்று மாநில அரசு கடந்த 2022ம் ஆண்டு தெரிவித்து இருந்தது.
1250 கிலோமீட்டர் சாலை காங்கிரீட் மயமாக்கப்பட்டுவிட்டது. அப்படி இருந்தும் சாலைகளில் இருக்கும் குண்டு குழிகளால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
மும்பையில் வரும் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா தொடங்குகிறது. அதற்குள் நகரில் உள்ள அனைத்து சாலைகளில் இருக்கும் குண்டு குழிகள் சரி செய்யப்படும் என்று மாநில பா.ஜ.க அமைச்சர் அசிஷ் ஷெலார் மற்றும் மங்கள் பிரபாத் லோதா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.