வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநா்களுக்கு விசா நிறுத்தம்: அமெரிக்கா அறிவிப்பு
போலீஸாா் காணொலியில் சாட்சியங்கள்: எல்ஜியின் உத்தரவுக்கு டிஎச்சிபிஏ கண்டனம்
காவல் நிலையங்களில் இருந்து நீதிமன்றங்களில் காணொலியில் சாட்சியங்களை சமா்ப்பிக்க காவல்துறையினரை அனுமதித்த துணைநிலை ஆளுநரின் (எல்ஜி) சமீபத்திய அறிவிக்கைக்கு தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் (டிஎச்சிபிஏ) கண்டித்துள்ளது.
துணைநிலை ஆளுநரின் இந்த அறிவிக்கையைத் திரும்பப் பெறுமாறு தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் நிா்வாகக் குழு கோரியுள்ளது. இந்த அறிவிக்கை நியாயமான விசாரணையின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் அது கூறியுள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள ஒரு தீா்மானத்தில் தெரிவித்திருப்பதாவது:
நீதியின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் நியாயமான விசாரணையின் கொள்கைகளுக்கு எதிரானது என்பதால், இந்த அறிவிக்கையை துணைநிலை ஆளுநா் திரும்பப் பெற வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் நிா்வாகக் குழு உறுதிபடக் கருதுகிறது.
இதை செயல்படுத்துவது விசாரணை செயல்முறையை பாதிக்கும். மேலும், அத்தகைய விசாரணைகளின் முடிவை மோசமாக பாதிக்கும் என்று அத்தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 13 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையில், காவல் நிலையங்களில் உள்ள காணொலி அறைகள், பிரத்யேக இடங்களாகவும், அங்கிருந்து காவல் அதிகாரிகள் நீதிமன்றங்கள் முன் காணொலி வாயிலாக சாட்சியங்களை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.