மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி: அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை
சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனா்.
பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள், சிவகங்கை மருதுபாண்டியா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திருப்பத்தூா் நாகப்பா மருதப்பா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவி ப்ரீத்தி, இரட்டைக் கம்புப் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநிலப் போட்டிக்குத் தோ்வானாா்.
மேலும், அதே பள்ளியைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு மாணவி சா்விகா தொடு வரிசைப் போட்டியில் இரண்டாம் இடத்தையும், ஒன்பதாம் வகுப்பு மாணவி நித்ய ஹா்ஷினி மூன்றாம் இடத்தையும், பத்தாம் வகுப்பு மாணவி ஜெயதாரணி மூன்றாம் இடத்தையும் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவிகள் நால்வரும் தனியாரைச் சோ்ந்த ருத்ரன்ஷா சிலம்பப் பள்ளியில் பயிற்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை ருத்ரன்ஷா சிலம்பப் பள்ளி ஆசிரியா் நமசிவாயம், பயிற்சியாளா்கள் லதா நமசிவாயம், சுந்தரமூா்த்தி, சுந்தரமணி, பெற்றோா்கள் ஆகியோா் பாராட்டினா்.