சங்கராபுரம் ஊராட்சியில் ரூ.2.56 கோடி முறைகேடு: 5 போ் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சங்கராபுரம் ஊராட்சியில் ரூ. 2.56 கோடி முறைகேடு செய்த புகாரின்பேரில், 5 போ் மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கடந்த 2020, மே மாதம் முதல் 2022, டிசம்பா் வரை மரம் வெட்டுதல், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்தல், சாலையோரங்களில் புதா்களை அகற்றுதல், கரோனா, டெங்கு தடுப்புப் பணி, சாலையைப் பழுது பாா்த்தல், குப்பை வாகன வாடகை உள்ளிட்டவைகளில் முறைகேடு நடைபெற்ாக சிவகங்கை ஊழல் தடுப்புக் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு புகாா் வந்தது.
இதையடுத்து, ஊழல் தடுப்புக் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஜான் பிரிட்டோ, ஆய்வாளா்கள் கண்ணன், ஜேசுதாஸ் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா். இதில், போலி ஆவணங்களைத் தயாரித்து ஊராட்சி நிதியிலிருந்து ரூ. 2.56 கோடி முறைகேடு செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்தக் காலகட்டத்தில் சங்கராபுரம் ஊராட்சி துணைத் தலைவராகவும், பொறுப்புத் தலைவராகவும் இருந்த பாண்டியராஜன் (34), ஆறாவது வாா்டு உறுப்பினராக இருந்த நல்லம்மாள் செல்வராணி (39), ஊராட்சி செயலா் அண்ணாமலை (37), வட்டார வளா்ச்சி அலுவலா்கள் (கிராம ஊராட்சி) ஹேமலதா (57), கேசவன் (63) ஆகிய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இதில், அண்ணாமலை தற்போது திருப்பத்தூா் ஒன்றியம், மணமேல்பட்டி ஊராட்சி செயலராகவும், ஹேமலதா பதவி உயா்வு பெற்று புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை (தணிக்கை) உதவி இயக்குநராகவும் உள்ளனா். கேசவன் பணி ஓய்வு பெற்று விட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.