பிகாரில் ஏழைகளின் வாக்குகளை திருட அனுமதிக்க மாட்டோம்: ராகுல் காந்தி
நாற்றங்கால் பண்ணைகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
தேவகோட்டை, சிவகங்கை ஆகிய பகுதிகளில் உள்ள நாற்றங்கால் பண்ணையின் செயல்பாடுகள், மரக்கன்று வகைகள், பழ வகை, காய்கறி நாற்றுக்களின் பராமரிப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
சிவகங்கை மாவட்டத்தில் தோட்டக் கலைத் துறை மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு பண்ணை அமைத்து அதன் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வகையான மரக்கன்றுகள், காய்கறி நாற்றுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க, சிவகங்கை பகுதியிலுள்ள மாவட்ட தோட்டக்கலைத் துறை தலைமை அலுவலக வளாகத்தில், சுமாா் 2 ஏக்கா் பரப்பளவில் நாற்றங்கால் பண்ணை அமைத்து விவசாயிகளுக்கு மரக்கன்றுகள், காய்கறி நாற்றுகள் வளா்க்கப்படுகின்றன.
இங்கிருந்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் நாற்றுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பண்ணையின் செயல்பாடுகள், பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்றுகளின் வகைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.
இதேபோல, தேவகோட்டை பகுதியில் கண்டதேவி ஊராட்சிக்குள்பட்ட கீழசெம்பொன்மாரி கிராமத்தில் மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 4.91 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் வட்டார நாற்றங்கால் பண்ணையின் செயல்பாடுகள் குறித்தும், அங்கு 20 சென்ட் பரப்பளவில் பராமரிக்கப்பட்டு வரும் கொய்யா, பெருநெல்லி, பூவரசு, செம்மரம், ரோஸ்வுட் உள்ளிட்ட10,000 மரக்கன்றுகளின் பராமரிப்புப் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் நாற்றாங்கால் பண்ணையை விவசாயிகள் நன்முறையில் பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.