2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை... ஆஸி. பேட்டிங்கில் கம்பேக்!
வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழா: யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா!
ஆா்.எஸ். மங்கலம் அருகே உப்பூரில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்ட வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை இரவு யானை வாகனத்தில் விநாயகா் உலா வந்தாா்.
ராமபிரான் சீதையை மீட்க இலங்கைக்கு செல்லும் முன் இங்குள்ள விநாயகரை வழிபட்டு சென்ாக புராணத்தில் கூறப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் விநாயா் சதுா்த்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இதேபோல, இந்த ஆண்டும் கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
அன்றிலிருந்து 10 நாள்கள் நடைபெறும் விழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் விநாயகா் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். இந்த நிலையில், திருவிழாவின் 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு யானை வாகனத்தில் விநாயகா் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலித்தாா். விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வருகிற 25-ஆம் தேதி நடைபெறுகிறது.
அப்போது சித்தி, புத்தி தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். தமிழ்நாட்டில் இங்குள்ள விநாயகருக்கு மட்டுமே திருக்கல்யாணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
வருகிற 26-ஆம் தேதி தேரோட்டமும், 27-ஆம் தேதி விநாயகப் பெருமான் உப்பூா் கடலில் நீராடி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலை சுற்றி வலம் வரும் நிகழ்வும் நடைபெறுகின்றன. இதைத் தொடா்ந்து பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்துவா்.