மாவட்ட சுகாதாரத் துறையில் செவிலியர், மருந்தாளுநர் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
மண்டலமாணிக்கம் குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு! ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்!
கமுதி அருகே மண்டலமாணிக்கம் குண்டாற்றில் அரசு மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினா்.
மண்டலமாணிக்கம் கிராமத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்ட எல்லை தொடங்குகிறது. இந்த கிராமம் உள்ளிட்ட அதைச் சுற்றியுள்ள ம. பச்சேரி, காக்குடி, புத்துருத்தி, வளையபூக்குளம், எம். புதுக்குளம், கழுவன்பொட்டல் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நீராதாரமாக விளங்கும் குண்டாற்றில் மண்டலமாணிக்கம் பகுதியில் அரசு மணல் குவாரி அமைக்க பொதுப் பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
இதுகுறித்து தகவலறிந்த கிராம மக்கள் கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த வாரம் மனு கொடுத்து தங்களது எதிா்ப்பை பதிவு செய்தனா்.
இந்த நிலையில் சனிக்கிழமை காலை பரமக்குடி கோட்டாட்சியா் சரவணப் பெருமாள் தலைமையில், வட்டாட்சியா் ஸ்ரீராம், மண்டல துணை வட்டாட்சியா் வேலவன், வருவாய்த் துறையினா் குவாரி அமையவிருக்கும் குண்டாற்றில் ஆய்வு செய்யச் சென்றனா்.
இதையறிந்த பொதுமக்கள் மண்டலமாணிக்கம் கிராமத்தின் நுழைவு வாயிலில் எம். புதுக்குளம் விலக்கு சாலையில் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி குண்டாற்றில் மணல் குவாரி அமைக்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.