பவானாவில் துப்பாக்கிகளுடன் 3 போ் கைது
வடக்கு தில்லியின் பவானாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த தாதா நவீன் பாலி கும்பலைச் சோ்ந்த மூன்று பேரை ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் போலீஸாா் கைது செய்தனா்.
ராஜேஷ் பவானியா மற்றும் நவீன் பாலி கும்பல்களுக்கு இடையே நடந்து வரும் போட்டியின் ஒரு பகுதியாக குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஒரு கொலையைத் திட்டமிட்டிருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து புகா் வடக்கு தில்லி காவல் துணை ஆணையா் ஹரேஷ்வா் கூறியதாவது:
சுதந்திர தினத்தன்று, பவானாவில் உள்ள ஒரு ஹோட்டல் முன் நீண்ட நேரம் சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டாா் சைக்கிள் நிறுத்தப்பட்டிருப்பதை போலீஸாா் கவனித்தனா். விசாரணையில், அந்த வாகனத்தின் உரிமையாளா் மூன்று நாள்களாக ஹோட்டலில்
தங்கியிருப்பது கண்டறியப்பட்டது.
ஹோட்டல் அறையில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, சந்தேகத்திற்கிடமான சூழலில் மூன்று போ் தோட்டாக்கள் மற்றும் 2 கைத்துப்பாக்கிகளுடன் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட மூவரும் பூத் குா்த்தைச் சோ்ந்த அன்சாா் ஆலம் (20), ரித்திக் (20) மற்றும் பஞ்சாபின் குா்தாஸ்பூரைச் சோ்ந்த ராஜேஷ் குமாா் என்ற சா்தாா் (28) என அடையாளம் காணப்பட்டனா்.
அன்சாரின் தகவலின்பேரில் மேலும் நடத்தப்பட்ட தேடுதலில் மற்றொரு கைத்துப்பாக்கி, இரண்டு பத்திரிகைகள் மற்றும் 13 தோட்டாக்கள் மீட்கப்பட்டன.
2023 ஆம் ஆண்டு அஜய் என்ற பகதூா் மற்றும் நிகழாண்டு ஜனவரியில் தா்மவீா் என்ற பில்லு ஆகியோரின் கொலைகளுக்கு பழிவாங்க குற்றம் சாட்டப்பட்டவா்கள் திட்டமிட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு முந்தைய குற்றப் பதிவு இல்லை. ஆனால் பரந்த தொடா்புகளுக்காக அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது தொடா்பாக பவானா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மற்ற சதிகாரா்களை அடையாளம் காண முயற்சிகள் நடந்து வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.