சிறைச்சாலைகள் இயக்குநராக எஸ்.பி.கே. சிங் நியமனம்
மூத்த ஐபிஎஸ் அதிகாரியும் முன்னாள் தில்லி காவல் துறை ஆணையருமான எஸ்.பி.கே.சிங் சிறைச்சாலைகள் இயக்குநராக சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரிவைச் சோ்ந்த 1988-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான எஸ்.பி.கே.சிங் தில்லியின் காவல் துறை ஆணையராக ஜூலை 31-ஆம் தேதி பெறுப்பேற்றாா். அந்தப் பதவியில் அவரது பதவிக்காலம் வெறும் 21 நாள்கள் மட்டுமே நீடித்தது.
அண்மையில் சிவில் லைன்ஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது முதல்வா் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடா்ந்து, மூத்த ஐபிஎஸ் அதிகாரியான சதீஷ் கோல்ச்சா காவல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டாா்.
முன்பு சிறைச்சாலைகள் இயக்குநராக பணியாற்றி வந்த சதீஷ் கோல்ச்சா 1992-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்தவா். தில்லியின் காவல் துறை ஆணையராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இந்நிலையில், சனிக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ உத்தரவில், ‘எஸ்.பி.கே.சிங் சிறைச்சாலைகள் இயக்குநராக நியமிக்க தில்லி துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா்’ என தெரிவிக்கப்பட்டது.
இவா் குடியரசுத் தலைவரின் சிறந்த சேவைக்கான காவல் பதக்கம் மற்றும் தேசிய மின்-ஆளுமைக்கான வெள்ளிப் பதக்கம் ஆகியவற்றை பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.