மம்மூட்டிக்கு என்ன ஆனது? மோகன்லால் பதிவால் ரசிகர்கள் நெகிழ்ச்சி!
மும்பை: நடுவழியில் நின்ற மோனோ ரயில்; அந்தரத்தில் உயிருக்கு போராடிய பயணிகள்; கிரேன் மூலம் மீட்பு
மும்பை மோனோ ரயில்
மும்பையில் செம்பூரில் இருந்து ஜேக்கப் சர்க்கிள் வரை மோனோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே இந்த ஒரு மோனோ ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
இந்த மோனோ ரயில் ஒரு சிமெண்ட் பீம் மீது அந்தரத்தில் பயணிக்கும். மோனோ ரயிலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாத காரணத்தால் மிகவும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
கனமழை
மும்பையில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக புறநகர் ரயில் சேவை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது.
இதனால் பயணிகள் ரயில் நிலையங்களில் பல மணி நேரம் காத்திருந்தனர். அதோடு மோனோ ரயிலில் அதிக அளவில் பயணிகள் பயணம் செய்தனர்.
அதிகமான பயணிகள்
இதற்கு முன்பு எப்போதும் இந்த அளவுக்கு மோனோ ரயிலில் கூட்டம் இருந்ததில்லை.
ரயிலில் வழக்கத்தை விட 442 பயணிகள் அதிகம் இருந்தனர். இதனால் மோனோ ரயில் இழுக்க முடியாமலும் மின் தடையாலும் நடுவழியில் அந்தரத்தில் நின்றது. பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பயணிகள் திணறல்
பயணிகள் மாநகராட்சி அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். ரயில் செம்பூர் மற்றும் பக்தி பார்க் இடையே நின்றது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக யாரும் உதவிக்கு வரவில்லை என்பதால், பயணிகள் சிலர் ரயில் ஜன்னல் கண்ணாடியை உடைக்க முயன்றனர். அதற்குள் தீயணைப்பு துறையினரும், மோனோ ரயில் பராமரிப்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
ரயிலில் ஏ.சி.வசதியும் துண்டிக்கப்பட்டது. இதனால் பயணிகள் மூடிய மோனோ ரயிலுக்குள் காற்று வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டனர்.
மூச்சுத்திணறல், மயக்கம்
இரண்டு பயணிகள் மயங்கி விழுந்தனர். 6 பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்களுக்கு சம்பவ இடத்திலேயே ஆம்புலன்சில் முதல் கட்ட சிகிச்சை கொடுக்கப்பட்டது.
மோனோ ரயிலில் கிரேன் மூலம் ரயிலில் சிக்கி இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
மீட்பு பணிகள்
மூன்று மணி நேரம் இந்த மீட்பு பணிகள் நடந்தது. இரவு 9.30 மணிக்குத்தான் மீட்பு பணிகள் முடிந்தது. அதிர்ஷ்டவசமாக மீட்பு பணியின் போது எந்த பயணிக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
பயணிகளை ரயில் ஜன்னலை உடைத்து பத்திரமாக மீட்ட காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
மெட்ரோபாலிடன் மேம்பாட்டு ஆணையம் விளக்கம்
இது குறித்து மும்பை மெட்ரோபாலிடன் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில்,''அளவுக்கு அதிகமான கூட்டம் காரணமாக ரயிலின் எடை அதிகரித்தது.
ரயில் வழக்கமாக 104 டன் அளவுக்கு இழுவைத்திறன் கொண்டது. ஆனால் ரயிலில் எடை 109 டன்னாக அதிகரித்தது. இதனால் மின் விநியோகத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு ரயில் நடுவழியில் நின்றுவிட்டது.
நடு வழியில் நின்ற மோனோ ரயிலை இழுக்க மற்றொரு ரயில் அனுப்பப்பட்டது. ஆனால் அளவுக்கு அதிகமான கூட்டம் காரணமாக நின்றுவிட்ட மோனோ ரயிலை இழுக்க முடியவில்லை. எனவே தீயணைப்பு துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஏக்நாத் ஷிண்டே பேட்டி
இது குறித்து துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில், ''ஹார்பர் லைனில் ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் மோனோ ரயிலில் பயணம் செய்ய ஆரம்பித்தனர்.
அளவுக்கு அதிகமான கூட்டம் காரணமாக மோனோ ரயில் ஒரு பக்கமாக சாய்ந்தது. அதோடு மின் விநியோகமும் பாதிக்கப்பட்டது'' என்றார்.
இந்த சம்பவம் குறித்து பயணி ஒருவர் கூறுகையில்,''நான் ரயிலில் 1.45 மணி நேரம் இருந்தேன். அதிகாரிகளிடமிருந்து எந்த வித தொடர்பும் இல்லாததால் பயணிகள் மிகவும் அச்சம் அடைந்தனர்.
ரயிலில் ஏ.சி.வசதியோ அல்லது மின்சாரமோ இல்லை என்பதால், சிலருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. எனவே ரயில் ஜன்னல் கண்ணாடியை உடைக்க முயன்றனர்'' என்றார்.
"பயணிகள் அச்சம் அடைய தேவையில்லை. சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தப்படும்" என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
இதற்கு முன்பு 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே போன்று ஒரு முறை மோனோ ரயில் நடுவழியில் நின்றது.