இதுவரை இல்லாத பேட்டரி திறன்: ஓப்போ கே 13 டர்போ இந்தியாவில் அறிமுகம்!
மகாராஷ்டிரா: யாரும் உதவ முன்வராத விரக்தி; இறந்த மனைவியின் உடலை பைக்கில் கட்டி எடுத்துச்சென்ற கணவர்
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் நடந்த விபத்தில் கியார்சி அமித் என்ற பெண் இறந்துபோனார். நாக்பூர் மற்றும் ஜபல்பூர் சாலையில் கியார்சியும் அவரது கணவர் அமித்தும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். மொர்பதா என்ற இடத்திற்கு அருகில் சென்றபோது அவர்களது வாகனத்தின் மீது லாரி ஒன்று இடித்துவிட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே கியார்சி இறந்து போனார். உடனே அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி தனது மனைவியின் உடலை எடுத்துச்செல்ல உதவும்படி அமித் கேட்டுக்கொண்டார்.

ஆனால் எந்த வாகன ஓட்டியும் வண்டியை நிறுத்தி உதவி செய்யவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் தனது மனைவியின் உடலை இரு சக்கர வாகனத்தின் பின்புறம் வைத்து கட்டிக்கொண்டு வாகனத்தைத் தனது சொந்த ஊருக்கு எடுத்துச்செல்ல ஆரம்பித்தார்.
அவரது சொந்த ஊர் மத்திய பிரதேசம் ஆகும். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாக்பூர் அருகில் உள்ள கராடி என்ற இடத்தில் வசித்து வந்தார். அமித் தனது மனைவியின் உடலை இரு சக்கர வாகனத்தில் கட்டிக்கொண்டு சொந்த ஊருக்கு எடுத்து சென்று கொண்டிருந்ததை ஆரம்பத்தில் பொதுமக்கள் அதனைச் சரியாகக் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் அவர் இறந்த பெண்ணின் உடலை எடுத்துச்செல்வதை அறிந்த சிலர் அவரது வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் வாகனத்தை நிறுத்தினால் பிரச்னை என்று பயந்து வாகனத்தை வேகமாக எடுத்து சென்றுவிட்டார். அவர் தனது மனைவியின் உடலை வாகனத்தில் எடுத்துச் செல்வதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்தனர். அது வைரலானது.

இது குறித்து சிலர் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். உடனே போலீஸார் விரைந்து செயல்பட்டு அமித் சென்ற இரு சக்கர வாகனத்தைத் தடுத்து நிறுத்தினர்.
அதில் இருந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையின் அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக போலீஸார் தெரிவித்தனர்.