இதுவரை இல்லாத பேட்டரி திறன்: ஓப்போ கே 13 டர்போ இந்தியாவில் அறிமுகம்!
சின்னத்திரை தேர்தல்: அன்று போட்டியிடாமல் தடுத்த அதே வேட்பாளரைத் தோற்கடித்து செயலாளர் ஆன நவீந்தர்!
தமிழ்த் தொலைக்காட்சிகளில் நடிக்கும் நடிகர், நடிகைகளை உறுப்பினர்களாகக் கொண்ட `சின்னத்திரை நடிகர் சங்கத்' தேர்தல் நேற்று சென்னையில் நடந்தது.
இந்தத் தேர்தலில் செயலாளர் பதவிக்கு தற்போதைய செயலாளர் போஸ் வெங்கட் போட்டியிடுவதாக முதலில் அறிவித்து, கடைசி நேரத்தில் பின்வாங்கி விட்டார். அவருக்குப் பதில் நிரோஷா 'வசந்தம்' அணி சார்பாகப் போட்டியிட்டார். அவரை எதிர்த்து 'நாதஸ்வரம்' முதலான பல சீரியல்களில் நடித்த நவீந்தர் மற்றும் அசோக் சாமுவேல் இருவரும் போட்டியிட்டனர். நவீந்தர், பரத் அமைத்த 'வெற்றி' அணி சார்பாகவும், அசோக் 'பிக்பாஸ்' தினேஷின் 'உழைக்கும் கரங்கள்' அணி சார்பாகவும் போட்டியிட்டனர்.
நேற்றைய வாக்கு எண்ணிக்கையின் முடிவில் நவீந்தர் 471 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகை நிரோஷாவை தோற்கடித்திருக்கிறார்.

இந்த இடத்தில் பழைய ஒரு சம்பவத்தை நினைவு கூர்கின்றனர் வெற்றி அணியினர்.
'அதாவது கடந்த தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் அதாவது 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் நவீந்தர் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்டார்.
அப்போது எதிரணியில் போட்டியிட்ட நிரோஷா, 'தேர்தல் நடத்தை விதியை நவீந்தர் மீறீ விட்டார்' என தேர்தல் அதிகாரி லியாகத் அலிகானிடம் புகார் கொடுக்க, அந்தப் புகார் காரணமாகவே கடைசி நேரத்தில் நவீந்தர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு தேர்தலில் நிற்க முடியாமல் போனது.
அதே செயலாளர் பதவி..!
அப்போது நவீந்தர் தேர்தல் நடத்தும் அதிகாரி, மற்றும் நிரோஷா தரப்பில் பேசி விளக்கம் தர முயன்றும் யாரும் அப்போது செவி சாய்க்கவில்லை.
கடைசியில் அந்த தேர்தலில் நவீந்தர் போட்டியிடவில்லை.
அதற்கு அடுத்து நடந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட நவீந்தர் கணிசமான வாக்குகளைப் பெற்றார். இந்த நிலையில் தான் இந்த தேர்தலில் வெற்றி அணி சார்பாக செயலாளர் பதவிக்கு நவீந்தர் போட்டியிட.. அதே செயலாளர் பதவிக்கு 'வசந்தமம்' அணி சார்பில் களம் இறங்கினார் நிரோஷா.
கடைசியில் நிரோஷவை தோல்வியடையச் செய்திருக்கிறார் நவீந்தர்' என்கின்றனர் அவர்கள்.

நவீந்தரிடம் பேசினோம்.
''நான் சுயேட்சையாகப் போட்டியிட்டப்ப கூட எனக்கு நிறைய ஓட்டு விழுந்திருந்தது. அதுக்கு காரணம், சீரியல் நடிகர் நடிகைகளூக்கு ஒரு பிரச்னைன்னா, எந்த நேரம்னாலும் நான் போய் நிப்பேன். அதுக்காகத்தான் எங்க உறுப்பினர்கள் ஆதரவு தர்றாங்க. இந்த தேர்தல்லயும் என்னை செயலாளரா தேர்ந்தெடுத்திருக்காங்க. அவங்க நம்பிக்கைக்குப் பங்கம் வந்திடாதபடி உறுப்பினர்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்ய முயற்சி செய்வேன்.
மத்தபடி முன்னாடி நடந்த கசப்பான சம்பவங்களை நினைவு கூர்ந்துதான் ஆகணுமா? அன்னைக்கு என் வாய்ப்பு பறிக்கப்பட்டப்ப வருத்தமா இருந்தது. காலம் எல்லாத்தையும் மாத்தும்னு நம்பினேன். இதோ மாத்திடுச்சு இல்லையா. அதனால கடந்து போன சம்பவங்களை மறந்திடலாம்னு நினைக்கிறேன்' என்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...