சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் தலைவரானார் பரத்; தினேஷ், ஆர்த்தி, நிரோஷா அதிர்ச்சித் தோல்வி!
சுமார் 2000 உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் இன்று சென்னையில் நடந்தது. காலை ஏழு மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை ஐந்து மணி வரை நடந்தது.
சீரியல் நடிகர் நடிகைகள் பலரும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். மொத்தம் 936 வாக்குகள் பதிவாகின. சமீபத்திய தேர்தல்களிலேயே அதிக வாக்குகள் பதிவானது இந்த முறைதான் என்கிறார்கள்.

வாக்குப் பதிவு முடிந்த அடுத்த சில மணி நேரங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தலைவர் பதவிக்கான வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன. இதில் நடிகர் பரத் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அவர் 491 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தற்போதைய தலைவர் சிவன் சீனிவாசன் 222 வாக்குகளும் தினேஷ் 175 வாக்குகளும் ஆர்த்தி 33 வாக்குகளும் பெற்றனர்.

’பொம்மலாட்டம், யாரடி நீ மோகினி முதலான பல சீரியல்களில் நடித்திருக்கும் பரத் கடந்த நிர்வாகத்தில் துணைத் தலைவராக பொறுப்பு வகித்தார். இதுவரையில் சங்க நிர்வாகத்தில் இளம் வயதில் தலைவரானது இவர்தான் என்கிறார்கள்.
தலைவர் பதவிக்கான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு செயலாளர் பதவிக்கான வாக்குகல் எண்ணப்பட்டன. இதில் நடிகர் நவீந்தர் 471 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நிரோஷா இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.