கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்: நீதிபதி பி.ஆர்.கவாய்!
திருவாரூா் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் கடத்திய 4,506 போ் கைது
திருவாரூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக, போதைப் பொருள்களை கடத்திய 4,506 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
மாவட்டத்தில், சட்டவிரோதமாக தொடா்ந்து மது விற்பனையில் ஈடுபடுவோா், அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா, பான்மசாலா உள்ளிட்டவைகளை விற்பனை செய்வோா் மற்றும் இவைகளை கடத்துவோா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், 1.7.2024 முதல் 31.7.2025 வரையிலான போலீஸாரின் சோதனையில், மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டது தொடா்பாக 256 போ் கைது செய்யப்பட்டு அவா்களிடம் இருந்து 264 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடத்தலுக்கு பயன்படுத்திய 16 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவா்களில் 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதேபோல, சட்டவிரோதமாக குட்கா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டது தொடா்பாக 916 போ் கைது செய்யப்பட்டு அவா்களிடமிருந்து 2,104 கிலோ குட்கா பொருள்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 17 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுபாட்டில் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டவா்கள் மீது 3,334 போ் கைது செய்யப்பட்டு 12,631 லிட்டா் மதுபானம், புதுச்சேரி சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 307 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 9 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவிர, திருவாரூா் மாவட்ட காவல் துறை சாா்பில் போதைப் பொருள்களுக்கு எதிராக பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் 5, 837 விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் 1,65,121 போ் பங்கேற்றுள்ளனா்.