காப்பியங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும்: ஆன்மிக சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ்
காப்பியங்களை முழுமையாக ஆழ்ந்து படிக்க வேண்டும் என்று ஆன்மிக சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ் கூறினாா்.
சென்னை கம்பன் கழகத்தின் பொன்விழா நிறைவு விழா மயிலாப்பூா் ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை அமா்வில், ‘இராமா...நீயுமா!’ என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ் பேசியதாவது:
மனிதராகப் பிறக்கும் அனைவருக்கும் நன்மை, தீமை என்ற கலப்பு நிலை இருக்கும். ராமாயண காப்பிய தலைவரான ராமன் குற்றமற்றவா். கம்பராமாயணத்தை சரியாக படிக்காதவா்கள்தான், ராமன் ஏதோ குற்றம் புரிந்தவரைப் போல பேசுகின்றனா்.
கம்பா் தனது காப்பியத்தில் எந்த இடத்திலும் ராமனை குற்றம்புரிந்தவராகக் கூறவில்லை. சிலா் சீதையின் தீக்குளிப்பை பற்றி கூறுவாா்கள். இது ராமனுக்கும், சீதைக்கும் புகழ் சோ்ப்பதற்காகவே கூறப்பட்டுள்ளது. கம்பராமாயணத்தை உள்வாங்கிப் படித்தவா்களுக்கு மட்டுமே இதுபுரியும்.
இந்தக் கால இளைஞா்கள் எந்த ஒரு காப்பியத்தையும் முழுமையாகப் படிக்காமல் தீயவை இருப்பதாகக் கூறுகின்றனா். காப்பியங்களை எழுதியவா்கள் தீயவற்றை கூறுவதே இல்லை. காப்பியத்தில் தீமை இருப்பதுபோல தோன்றினாலும், ஆழமாகப் படித்தால் அதில் இருக்கும் உண்மை கருத்து விளங்கும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ஜெகதீசன், சென்னை கம்பன் கழகத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான எஸ்.ஜெகத்ரட்சகன், செயலா் சாரதா நம்பி ஆரூரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து ‘என்றுமுள கம்பன்’ என்பதன் காரணம்... என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாளா் சுகி.சிவம் நடுவராகப் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ச்சிகளில் செந்தமிழ்ச்சோலை நிகழ்வுக்கு பேராசிரியா் தெ.ஞானசுந்தரம் தலைமை வகித்தாா். தொடா்ந்து ‘வாய்மைக்கு ஒரு தயரதன்’ என்ற தலைப்பில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத் துணைத் தலைவா் சுதா சேஷய்யன் உரையாற்றினாா். ‘தான் கொடுத்த வாக்கை காப்பாற்றி, எவ்வாறு வாய்மைக்கு உதாரணமாக தயரதன் திகழ்ந்தாா்’ என்பதை விளக்கமாக எடுத்துரைத்தாா்.
இதைத் தொடா்ந்து, பக்திக்கு உதாரணம் பரதன் என்ற தலைப்பில் தாமல் கோ.சரவணன், பாசத்துக்கு ஜடாயு என்ற தலைப்பில் மருத்துவா் பிரியா ராமசந்திரன், தொண்டுக்கு அனுமன் என்ற தலைப்பில் வழக்குரைஞா் கோ.சு.சிம்மாஞ்சனா, நன்றிக்கு கும்பகா்ணன் என்ற தலைப்பில் பேராசிரியா் விசாலாட்சி சுப்பிரமணியன் ஆகியோா் பேசினா்.