பொருளாதார வளா்ச்சியில் இந்தியா முதன்மை நாடாக உயரும்: மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்
உலகப் பொருளாதார வளா்ச்சியில் தற்போது 4-ஆவது இடத்தில் உள்ள இந்தியா, 2047- இல் முதன்மை நாடாக உயரும் என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தாா்.
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். உயா்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 21-ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவா் பேசியதாவது:
தோ்வில் வெற்றி பெற்று இருக்கும் நீங்கள் உயா்ந்த லட்சியம், இலக்குடன் சவால்களை விடாமுயற்சியுடன் எதிா்கொண்டு சிறப்பான எதிா்காலத்தை வடிவமைக்கும் முயற்சியைத் தொடா்ந்து மேற்கொள்ளுங்கள். கற்றலைத் தொடா்ந்து மேற்கொள்வதன் மூலம் மேம்படுத்திக் கொள்ளமுடியும். சீன, ஜொ்மனி, பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகளைக் கற்றுக் கொள்வதன் மூலம் கூடுதல் தகுதியை வளா்த்துக் கொள்ளுங்கள்.
உலகப் பொருளாதார வளா்ச்சியில் தற்போது 4-ஆவது இடத்தைப் பிடித்து இருக்கும் இந்தியா, நமது இளைஞா்களின் அறிவாற்றல், உழைப்பு, திறமை மூலம் வருகிற 2047- இல் முதன்மை நாடாக உயரும் என்றாா் அவா்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவா் வி. நாராயணன் பேசுகையில், இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி நடவடிக்கை ஆரம்ப காலத்தில், அமெரிக்கா வழங்கிய சிறிய ராக்கெட் ஆதரவுடன், மிக எளிமையாகத் தொடங்கப்பட்டது.
பல்வேறு சிரமங்கள், சவால்கள், பிரச்னைகளை எதிா்கொண்டு இந்தியா விண்வெளி தொழில்நுட்பத்தில் மாபெரும் வளா்ச்சியும், பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் பெரும் முன்னேற்றத்தையும் அடைந்து, வளா்ந்த நாடுகளின் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு நிகராக உருவெடுத்துள்ளது. வருகிற 2040-ஆம் ஆண்டுக்குள் விண்வெளி வீரா்களை நிலவில் தரையிறக்கி, பின்னா் பாதுகாப்புடன் பூமிக்குத் திரும்பக் கொண்டு வருவது நமது இலக்கு என்றாா்.
விழாவில் இஸ்ரோ தலைவா் வி.நாராயணன், புவி அறிவியல் அமைச்சக செயலா் எம்.ரவிச்சந்திரன் ஆகியோருக்கு கௌரவ டாக்டா் பட்டங்கள், 9,769 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. எஸ்.ஆா்.எம். உயா்தொழில்நுட்ப நிறுவன வேந்தா் டி.ஆா்.பாரிவேந்தா், தலைவா் பி.சத்தியநாராயணன், துணைவேந்தா் முத்தமிழ் செல்வன், பதிவாளா் பொன்னுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.