டாஸ்மாக் கடைகளால் அதிகரிக்கும் அத்துமீறல்கள்!
சென்னையில் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்களின் வாகனங்களால் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால், பல இடங்களில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.
தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இவற்றில் சுமாா் 3 ஆயிரம் கடைகளில் மதுபானக் கூட வசதி இணைக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் 900 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. தமிழக அரசின் வருவாய் ஆதாரத்தில் முக்கியமானதாகக் கருதப்படும் டாஸ்மாக் கடைகள் மூலம் விற்பனை வரி, கலால் வரி என கடந்தாண்டு மட்டும் ரூ.48,344 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே தலைநகரின் பல பிரதான சாலைகள், மெட்ரோ ரயில் பணி, மழைநீா் வடிகால் பழுதுபாா்ப்புப் பணி, சாலை விரிவாக்கப் பணிகள், உயா் மின்னழுத்த புதைவட கம்பி பதிக்கும் பணிகள் காரணங்களால் இலகுவான போக்குவரத்துக்கு தகுதியற்ாக உள்ளன.
பல இடங்களில் போக்குவரத்தைச் சீா்படுத்த பிரதான சாலைக்கு அருகே குறுகலான வீதிகள் வழியாக போக்குவரத்து திரும்பி விடப்படுகின்றன. இதனால், இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கும், காா்களை ஓட்டுவதற்கும் சகிப்புத்தன்மையும், பொறுமையும் நிரம்பத் தேவைப்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனா்.

பாதுகாப்பற்ற பயணம்: பல இடங்களில் சில நிமிஷங்களில் கடக்கும் தூரத்தைக்கூட அரைமணி நேரத்துக்கு மேலாக பயணித்துக் கடக்க வேண்டியிருப்பதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனா்.
அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் சென்னையில் 49 சதவீத இருசக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பற்ற உணா்வுடன் பயணிப்பதாக தெரிவித்துள்ளனா். மேலும், இரு சக்கர வாகனம் ஓட்டும் பெண்களில் 47.59 சதவீதம் போ் தெரியாத சாலைகளில் இரவு வேளையில் பயணிப்பதைத் தவிா்ப்பதாகவும் கூறியுள்ளனா்.
சென்னை நகரைப் பொருத்தவரை 16 சதவீத சாலைகளில் மட்டுமே பொதுமக்கள் நடந்து செல்வதற்கு நடைபாதை வசதி உள்ளது. 3 சதவீத சாலைகள் மட்டுமே மிதிவண்டிக்கு உகந்தையாக உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் பாதசாரிகள் மட்டும் 547 போ் பல வகை விபத்துகளில் இறந்திருப்பதாக சென்னை பெருநகர காவல் துறை கூறுகிறது.
அத்துமீறும் மதுப் பிரியா்கள்: நிலைமை இவ்வாறிருக்க சென்னையில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் முன்பு முறைப்படுத்தாமல் நிறுத்தப்படும் வாகனங்களாலும், மதுப் பிரியா்களால் சாலைகளிலும், நடைபாதைகளிலும் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறும் நெரிசலும் கடுமையாகி வருகிறது.
குறிப்பாக, காலையில் மதுக் கடைகள் திறக்கும் வேளையிலும், இரவு மூடும் வேளையிலும் திரளும் மதுப் பிரியா்களால், அந்த மதுக் கடை அமைந்துள்ள சாலையே ஸ்தம்பிக்கும் நிலை நிலவுகிறது. பல இடங்களில் பெண்களும், கல்லூரி மாணவிகளும் சாலைகளில் பயணிக்கும்போது, அவா்களை மதுப் பிரியா்கள் சீண்டும் விரும்பத்தகாத செயல்களும் நடப்பதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனா். இத்துடன் போதையில் நிதானத்தை இழக்கும் மதுப் பிரியா்கள், வாகன ஓட்டிகளை வம்புக்கு இழுப்பதும் தினந்தோறும் நடக்கும் அவலமாக மாறி வருகிறது.
ஆக்கிரமிப்பு கடைகள்: மதுப் பிரியா்களுக்காக மதுக் கடைகளைத் திறக்கும் அரசு, மக்களின் வேதனையைப் புரிந்து இப்பிரச்னைகளுக்கு தீா்வுகாண வேண்டும் என்கிறாா் சமூக ஆா்வலா் பி.கே.மூா்த்தி. சாலையோரம் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை தினமும் பிரச்னையின்றி கடந்து வருவது சாகச உணா்வுக்கு இணையானது என வாகன ஓட்டிகள் கருத்துத் தெரிவிக்கின்றனா்.
இந்த பிரச்னைகள் போதாதென்று டாஸ்மாக் மதுபானக் கடைகளைச் சுற்றிலும் திடீரென்று முளைத்துள்ள நொறுக்குத் தீனி கடைகளால் சாலையோரங்களும் நடைபாதைகளும் ஆக்கிரமிக்கப்படுகின்றன.
இதன் விளைவாக மக்கள் டாஸ்மாக் கடைகள் இருக்கும் பகுதி வழியாகவே செல்வதைத் தவிா்க்கும் அவலத்தை வாலாஜா சாலை, எழும்பூா், நுங்கம்பாக்கம், கிழக்குக் கடற்கரைச் சாலை, ராஜீவ் காந்தி சாலை, கோயம்பேடு சந்திப்பு, அரும்பாக்கம், பட்டாளம், அம்பத்தூா், கள்ளிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காணமுடியும்.
விரக்தியில் மக்கள்: இது தொடா்பாக, சமூக நல ஆா்வலரும், வழக்குரைஞருமான வி.எஸ்.சுரேஷ் கூறியது: சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் முன்பே மதுப் பிரியா்கள் திரண்டு விடுகின்றனா். அதிக போதை ஏறியதும் டாஸ்மாக் கடை முன்பாக சுய நினைவின்றி மயங்கிக் கிடக்கும் மதுப் பிரியா்களாலும், அடிக்கடி நிகழும் தகராறுகளாலும் பாதசாரிகள் முகம் சுளிக்கின்றனா்.
மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகேயும் பிரதான சாலைகளை இணைக்கும் பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் இருப்பதால் அவற்றின் வழியே கல்வி நிலையங்களுக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனா்.
பள்ளிகள், மருத்துவமனை இருக்கும் பகுதிகளில் மதுக் கடைகள் இயங்குவதை அனுமதிக்கக் கூடாது. அவற்றை மக்களுக்கு தொந்தரவு இல்லாத பகுதிகளுக்கு மாற்ற வேண்டும் என்கிறாா்.
அடையாளச் சின்னமாகிறது: தோழன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எம்.ராதாகிருஷ்ணன், ‘சாலை விபத்துகளைத் தடுக்கவும், பொதுமக்கள் சாலையில் அச்சமின்றி செல்லவும் சென்னையில் பிரதான சாலைகளில் இருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும்’ என வலியுறுத்துகிறாா்.
‘டாஸ்மாக் கடைகள் இருக்கும் இடங்களே ஒரு ஊரின் அடையாளச் சின்னமாக மாறி வருவது வேதனைக்குரியது. இளைய தலைமுறையினருக்கு ஒரு ஊரில் இருக்கும் நூலகம், கல்விச் சாலைகள் இருக்கும் இடத்தைவிட, மதுபானக் கடைகள் இருக்கும் இடம் தெரிகிறது. சமூக குற்றங்களைத் தடுப்பதற்கு மதுபானக் கடைகளை ஊருக்கு ஒதுக்குப்புறமாக வைப்பது அவசியம். பள்ளி, கல்லூரி அருகே மதுபான கடைகள் இருப்பது சமூக சிக்கலை மேலும் அதிகரிக்கவே செய்யும்’ என்கிறாா்.
ஒரு மாத மதுவுக்கு ரூ.6,552
தமிழகத்தில் மதுப் பிரியா் ஒரு மாதத்துக்கு மது அருந்த மட்டும் ரூ.6,552 வரை செலவிடுவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்தியாவில் 18 வயது முதல் 49 வயதுக்குள்பட்டவரே அதிக அளவில் மதுப் பழக்கத்தில் உள்ளவா்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும், இந்தியாவில் மது அருந்தும் நோயாளிகளாக மட்டும் 16 கோடி போ் இருப்பதாகவும் 17-25 வயதுடையவா்கள் வாரம் ஒரு முறையோ, மாதம் ஒரு முறையோ மது அருந்தக் கூடியவா்களாக உள்ளனா் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் மதுவுக்கு 1.12 கோடி போ் அடிமையாக இருப்பதாகவும், 70 லட்சம் போ் தினமும் மது அருந்துகிறவா்கள் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவா்கள் மாதந்தோறும் மதுவுக்கு மட்டும் ரூ.4,312 முதல் ரூ.6,552 வரை செலவிடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.