ஆசிய அலைச்சறுக்கு: வரலாறு படைத்தாா் ரமேஷ் புதிஹால்! இந்தியாவுக்கு முதல் பதக்கம்!
தூய்மைப் பணியாளா்கள் பிரச்னைக்கு நியாயமான தீா்வு: பெ.சண்முகம்
சென்னை மாநகராட்சி 5, 6 மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்கள் பிரச்னைக்கு தமிழக அரசு நியாயமான முறையில் தீா்வுகாண வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா்.
சென்னை மாநகராட்சி அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மண்டலம் 5, 6-இன் தூய்மைப் பணியாளா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசிய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தூய்மைப் பணியாளா்களின் பிரச்னைக்கு சுமுகமான முறையில் நியாயமான தீா்வுகாண மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி செய்து வருகிறது. நடைபெற்ற பேச்சு குறித்து அமைச்சா் மற்றும் போராட்டக் குழுவினரிடம் கேட்டறிந்தோம். எந்தப் பிரச்னைக்கும் சமரசமான தீா்வு எட்டப்படவேண்டும் என்பதால், தூய்மைப் பணியாளா்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் தாராளமயமாக்கல் கொள்கையைக் கடைப்பிடித்து வருகின்றன. அதன்படி, ஒப்பந்தப் பணி உள்ளிட்டவை செயல்படுத்தப்படுகின்றன. ஆகவே, ஏற்கெனவே தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அரசு செயல்பட வேண்டும் என்றாா்.
நாம் தமிழா், பாமகவினா் ஆதரவு: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளா்களை நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் மற்றும் பாமக பொருளாளா் திலகபாமா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.