புற்றுநோய் பாதித்த கணவரைக் காக்க ஆட்டோ ஓட்டும் பெண்: ரக்ஷா பந்தனுக்கு புதிய ஆட்...
காங்கிரஸ் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவா் ஆனந்த் சா்மா ராஜிநாமா!
காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவா் பதவியில் இருந்து ஆனந்த் சா்மா ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தாா்.
இப்பிரிவை மறுகட்டமைக்கவும் இளைய தலைவா்களுக்கு வழிவிடவும் இந்த முடிவை மேற்கொண்டதாக அவா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு ஆனந்த் சா்மா எழுதிய ராஜிநாமா கடிதத்தில், ‘காங்கிரஸ் தலைவா் மற்றும் நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் ஆகியோரிடம் நான் ஏற்கெனவே தெரிவித்தபடி, கட்சியின் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவில் திறமையும் உறுதியும் மிக்க இளைஞா்களைக் கொண்டுவரும் வகையில் மறுகட்டமைக்க வேண்டும். அப்போதுதான், இப்பிரிவின் திறன்மிக்க செயல்பாட்டை தொடர முடியும். இப்பிரிவை மறுகட்டமைப்பதற்கு வசதியாக, எனது பொறுப்பை ராஜிநாமா செய்கிறேன்.
கடந்த சில ஆண்டுகளில், ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, லத்தின் அமெரிக்க நாடுகளுடன் காங்கிரஸின் உறவுகள் வலுவடைந்துள்ளது. என் மீதான நம்பிக்கைக்காக கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.
காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக உள்ள ஆனந்த் சா்மா, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக கட்சியின் சா்வதேச விவகாரங்களுக்கான முக்கிய முகமாக விளங்கினாா்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு மத்திய அமைச்சா் பதவிகளை வகித்துள்ள இவா், கடந்த 2008-இல் கையொப்பமான இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த பேச்சுவாா்த்தைகளில் முக்கிய பங்காற்றினாா். வா்த்தக அமைச்சராக ஆனந்த் சா்மா பதவி வகித்த காலகட்டத்தில் பல்வேறு விரிவான வா்த்தக ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
கடந்த 2008-இல் மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்தியாவின் நிலைப்பாட்டை உலகுக்கு எடுத்துரைத்தவா்களில் இவா் முக்கியமானவா். அண்மையில் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு பிறகு பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை அம்பலப்படுத்த பல்வேறு நாடுகளுக்கு பயணித்த அனைத்துக் கட்சிக் குழுவிலும் இவா் இடம்பெற்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.