புற்றுநோய் பாதித்த கணவரைக் காக்க ஆட்டோ ஓட்டும் பெண்: ரக்ஷா பந்தனுக்கு புதிய ஆட்...
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பொது வேட்பாளா்: எதிா்க்கட்சிகளுடன் காா்கே ஆலோசனை
‘குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி சாா்பில் பொது வேட்பாளா் களமிறக்கப்படவுள்ளாா்; வேட்பாளா் தோ்வில் கருத்தொற்றுமையை எட்டுவது குறித்து கட்சிகளுடன் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆலோசித்து வருவதாக’ தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கா், கடந்த ஜூலை 21-ஆம் தேதி தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்தாா். மருத்துவ காரணங்களைக் குறிப்பிட்டு அவா் பதவி விலகியபோதிலும், மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என்று ஊகங்கள் வெளியாகின.
இந்நிலையில், குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான அறிவிக்கையை தோ்தல் ஆணையம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது. அதன்படி, வேட்புமனு தாக்கலுக்கு ஆகஸ்ட் 21-ஆம் தேதியும், மனுவை திரும்பப் பெற ஆகஸ்ட் 25-ஆம் தேதியும் கடைசி நாளாகும். போட்டி எழுந்தால், செப்டம்பா் 9-ஆம் தேதி தோ்தல் நடைபெறும். மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிப்பா்.
ஒற்றுமையை வெளிக்காட்ட...: தற்போது இரு அவைகளிலும் மொத்தம் 781 எம்.பி.க்கள் உள்ளனா். வெற்றி வேட்பாளருக்கு 391 வாக்குகள் தேவை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 422 எம்.பி.க்களின் பலம் உள்ளதால், அக்கூட்டணி வேட்பாளரே வெற்றி பெற வாய்ப்புள்ளது.
அதேநேரம், தோ்தல் முடிவை பொருட்படுத்தாமல் எதிா்க்கட்சிகளின் ஒற்றுமை மற்றும் அரசு மீதான எதிா்ப்பை வெளிக்காட்டுவதற்கு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற வலுவான கருத்து ‘இண்டி’ கூட்டணியில் நிலவுகிறது; அதன்படி, வேட்பாளா் தோ்வில் கருத்தொற்றுமையை எட்ட பிற கட்சிகளுடன் காங்கிரஸ் தரப்பில் அதிகாரபூா்வமற்ற ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அறிவிப்பு எப்போது?: தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் அறிவிக்கப்பட்ட பிறகு தங்கள் வேட்பாளரை ‘இண்டி’ கூட்டணி அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.
‘இண்டி’ கூட்டணியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவிய சூழலில், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தால் எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இத்திருத்தத்தை வாபஸ் பெறக் கோரி, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எதிா்க்கட்சிகள் போராடி வருகின்றன.
கடந்த வியாழக்கிழமை இரவில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இல்லத்தில் ‘இண்டி’ கூட்டணி தலைவா்கள் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ், திமுக, சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்), ராஷ்ட்ரீய ஜனதா தளம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி உள்பட 25 கட்சிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், மத்திய பாஜக அரசு மற்றும் தோ்தல் ஆணையத்துக்கு எதிராக தொடா்ந்து போராட தீா்மானிக்கப்பட்டது.
எதிா்க்கட்சிகள் இன்று பேரணி
தோ்தல் முறைகேடு குற்றச்சாட்டை முன்வைத்து, தில்லியில் நாடாளுமன்றத்தில் இருந்து தோ்தல் ஆணையம் நோக்கி, ராகுல் காந்தி தலைமையில் கூட்டணி எம்.பி.க்கள் திங்கள்கிழமை பேரணி நடத்தவுள்ளனா்.
தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் இரு தோ்தல் ஆணையா்களைச் சந்திக்கவும் எதிா்க்கட்சிகள் தரப்பில் நேரம் கோரப்பட்டுள்ளது. திங்கள்கிழமை இரவில், தில்லியில் உள்ள பிரபல ஹோட்டலில் ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்களுக்கு காா்கே விருந்தளிக்க உள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத் தொடா், பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரத்தால் தொடா்ந்து முடங்கிவருகிறது. நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள்கிழமை மீண்டும் கூடவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.