கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்: நீதிபதி பி.ஆர்.கவாய்!
நமது கலாசாரம், பாரம்பரியம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா்.
அருணாசல பிரதேச தலைநகா் இடாநகரில் குவாஹாட்டி உயா்நீதிமன்ற அமா்வுக்கான புதிய கட்டடத்தின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஐந்து நீதிமன்ற அறைகள் மற்றும் நவீன வசதிகளுடன் ரூ.135.35 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய நீதிமன்ற வளாகத்தின் திறப்பு விழாவில் மத்திய அமைச்சா்கள் கிரண் ரிஜிஜு, அா்ஜுன் ராம் மேக்வால், உச்சநீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல் புயான், என்.கோட்டீஸ்வா் சிங், சந்தீப் மேத்தா, விஜய் பிஷ்னோய், மாநில முதல்வா் பெமா காண்டு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நீதிமன்ற வளாகத்தைத் திறந்து வைத்து பி.ஆா்.கவாய் பேசியதாவது: அரச குடும்பம், நீதிபதிகள் அல்லது நிா்வாகத்தை சோ்ந்தவா்களுக்காக நீதிமன்றங்களும், நீதித்துறையும், நாடாளுமன்றமும் இல்லை. அனைவரும் மக்களுக்கு நீதி வழங்கவே உள்ளோம். அந்த நீதி மக்களின் வீடுகளைத் தேடிச் செல்ல வேண்டும். விரைவாகவும், குறைந்த செலவிலும் நீதி வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
நமது கலாசாரம், பாரம்பரியம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும். அவற்றைப் பாதுகாக்க வேண்டியது அரசமைப்புச் சட்டப்படி நமது கடமை. ஒவ்வொரு மதத்துக்கும் புனித நூல் உள்ளது. ஆனால் ஒவ்வொரு இந்தியருக்கும் அரசமைப்புச் சட்டம்தான் புனித நூலாகும். அதை நாட்டு மக்கள் அனைவரும் வாசிக்க வேண்டும்’ என்றாா்.
நீதித்துறை கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும்: ரிஜிஜு
நிகழ்ச்சியில் அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசியதாவது: விசாரணை நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பு மிகவும் அவசியம். பொதுமக்கள் எளிதாக நீதி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். மக்களுக்கும் நீதிக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க வேண்டும். நீதிமன்றங்களுக்கு அப்பாலும் நீதி வழங்கப்பட வேண்டும்.
பிரதமா் மோடி தலைமையில் மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, ஆங்கிலேயா் காலத்தில் உருவாக்கப்பட்ட, காலத்துக்கு ஒவ்வாத 1,500-க்கும் மேற்பட்ட சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டங்கள் மக்களுக்கு தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தி வந்தன. பிரதமா் மோடி குறிப்பிடுவதுபோல, பொதுமக்களின் வாழ்வில் அரசின் தலையீடு முடிந்தவரை குறைக்கப்பட வேண்டும்.
நாடு முழுவதும் 5 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை விரைந்து முடிக்க, இணைய வசதி கொண்ட நீதிமன்றங்கள் மற்றும் அதற்கான உள்கட்டமைப்புக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு முதல், குவாஹாட்டி உயா்நீதிமன்றத்துக்கு 21 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். அருணாசல பிரதேசம், மிஸோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் அமா்வுகளுக்கு தலா மூன்று நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். 2018-ஆம் ஆண்டுவரை அருணாசல பிரதேசத்தைச் சோ்ந்த யாரும் உயா் நீதிமன்ற நீதிபதியாக இருந்ததில்லை என்றாா்.
தொடா்ந்து, மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் பேசுகையில், ‘திறப்பு விழா கண்டுள்ள புதிய நீதிமன்ற வளாகம் வெறும் கட்டடம் அல்ல, அது ஒரு நீதிக் கோயில். மேலும், இந்தியாவின் வளா்ச்சி இலக்கான ‘வளா்ந்த பாரதம்’ என்ற லட்சியக் கனவை அடைய உதவும் ஒரு கருவியாகவும், அதை நோக்கிய பயணத்தின் ஒரு முக்கிய அங்கமாகவும் இந்தப் புதிய நீதிமன்ற கட்டடம் இருக்கும்’ என்றாா்.