தில்லியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணிக்கு அனுமதி மறுப்பா?
Doctor Vikatan: கனவுகளே இல்லாத தூக்கம் வரமா, சாபமா?
Doctor Vikatan: சிலருக்கு தூக்கத்தில் அடிக்கடி கனவுகள் வருகின்றன. சிலரோ, கனவுகளே இல்லாமல் தூங்குவதாகச் சொல்கிறார்கள். உண்மையில், கனவுகள் இல்லாத தூக்கம் என்பது வரமா, சாபமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நரம்பியல் சிகிச்சை மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.

அன்றாடம் நம் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள்தான் கனவுகளாகப் பிரதிபலிக்கும். கனவே இல்லாத தூக்கம் வரமா, சாபமா என்பது அவரவர் தூக்க நிலை, விருப்பம் போன்றவற்றைப் பொறுத்தது. பொதுவாக எல்லோருக்குமே நல்ல, ஆழ்ந்த உறக்கம்தான் ஆசையாக இருக்கும்.
இரவு தூக்கமானது, என்ஆர்இஎம் (NREM) தூக்கம் மற்றும் ஆர்இஎம் (REM) தூக்கம் என இரண்டு முக்கிய கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. என்ஆர்இஎம் என்பது Non-Rapid Eye Movement என்பதன் சுருக்கம். அதாவது, இந்தத் தூக்கத்தின்போது கண்களின் அசைவு வேகமாக இருக்காது. இதில் மூன்று நிலைகள் இருக்கும்.
முதல் நிலை என்பது தூக்கத்தின் ஆரம்பம். இந்த நிலையில் நாம் முழுவதுமாகத் தூங்கிவிட மாட்டோம். விழித்திருக்கும் நிலையிலிருந்து தூக்க நிலைக்குச் செல்லும் இடைப்பட்ட நிலை இது. இந்த நிலை சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். இரண்டாவது சற்று ஆழ்ந்த தூக்க நிலை. உடல் வெப்பநிலை குறையும், இதயத் துடிப்பு மெதுவாகும். இந்த நிலையில், நாம் எளிதில் எழுந்து விடமாட்டோம். இது மொத்த தூக்க நேரத்தில் அதிக நேரம் நீடிக்கும்.

மூன்றாவது நிலைதான் மிகவும் ஆழ்ந்த தூக்க நிலை (deep sleep). இந்த நிலையில், உடல் திசுக்களைச் சரிசெய்தல், எலும்பு மற்றும் தசை வளர்ச்சி, மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்ற முக்கியமான உடல் செயல்பாடுகள் நடைபெறும். இந்த நிலையில், ஒருவரை எழுப்புவது மிகவும் கடினம். இந்த நிலைதான் நமக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.
ஆர்இஎம் (Rapid Eye Movement) தூக்கத்தின்போது, கண்கள் வேகமாக அசைந்தபடி இருக்கும். உடலை அசைக்க முடியாது. ஆர்இஎம் தூக்கத்தில்தான் பெரும்பாலும் நாம் தெளிவான மற்றும் தீவிரமான கனவுகளைக் காண்கிறோம். இது முடிந்ததும் மீண்டும் என்ஆர்இஎம் தூக்கம் வரும். அடுத்து ஆர்இஎம் தூக்கம் வரும். இந்த இரண்டும் ஒரே இரவில் மாறி மாறி பல முறை நிகழும். முழுமையான இரவுத் தூக்கம் பல சுழற்சிகளாக (cycles) நடக்கிறது. ஒவ்வொரு சுழற்சியிலும், நாம் முதலில் என்ஆர்இஎம் நிலைகளைக் கடந்து, பின்னர் ஆர்இஎம் தூக்கத்தை அடைகிறோம். தொந்தரவுகள் அற்ற ஆழ்ந்த உறக்கம்தான் பலரின் விருப்பமாகவும் இருப்பதால், கனவுகள் இல்லாத தூக்கத்தை வரம் என்றே சொல்லலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.