`ராஜினாமா செய்த தன்கர் எங்கே?; சீனா, ரஷ்யாவில்தான் இப்படி நடக்கும்’ - கேள்வி எழு...
SIR: வாக்குத் திருட்டு; `தேர்தல் ஆணைய முற்றுகைப் போராட்டம்' - 300க்கும் மேற்பட்ட எம்.பிகள் பேரணி?
2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க அரசுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து ஊடகங்களிடம் பேசினார். மேலும், பீகாரில் நடைபெற்றுவரும் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப்பணி குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையம் மீது முன்பெப்போதும் இல்லாத வகையில் பல்வேறு அதிர்ச்சிகரக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது.
அதன் அடிப்படையில், இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகளை ஒருங்கிணைத்து, ராகுல் காந்தி பேரணி நடத்தவிருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியான நிலையில், இன்று 25 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலிருந்து தேசிய தலைநகரில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) தலைமையகத்திற்கு பேரணியாகச் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ், சமாஜ்வாடி, டி.எம்.சி, தி.மு.க, ஆம் ஆத்மி, இடதுசாரி கட்சிகள், ஆர்.ஜே.டி, என்.சி.பி (எஸ்.பி), சிவசேனா (யுபிடி) மற்றும் தேசிய மாநாடு உள்ளிட்ட பல கட்சிகள் நாடாளுமன்றத்தின் மகர் துவாரிலிருந்து காலை 11.30 மணிக்கு இந்தப் பேரணியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்கு திருட்டு
இந்தப் பேரணியில் "வாக்கு திருட்டு" என்பதை முன்னிலைப்படுத்தவும், ஆங்கிலம், இந்தி, தமிழ், பெங்காலி, மராத்தி மொழிகளில் சுவரொட்டிகள், பதாகைகளை ஏந்திச் செல்லவும் போராட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ``வாக்குத் திருட்டு என்பது ‘ஒரு மனிதன், ஒரு வாக்கு’ என்ற அடிப்படைக் கருத்து மீதான தாக்குதல். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு ஒரு நேர்மையான வாக்காளர் பட்டியல் அவசியம். வெளிப்படையாக இருக்க வேண்டும், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் போன்ற எங்களின் கோரிக்கைகள் தேர்தல் ஆணையத்திடம் தெளிவாக முன்வைத்திருக்கிறோம். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதே எங்கள் போராட்டத்தின் நோக்கம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கிடையில், பெயர் வெளியிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர், ``டெல்லி காவல்துறை 2 கி.மீ.க்கும் குறைவான தொலைவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தை அடையும் இந்தப் பேரணியை அனுமதிக்க வாய்ப்பில்லை. காவல்துறையின் அனுமதிக்கான முறையான கோரிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை" எனத் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.