ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறக்கப்படாததால் ஒரு மணி நேரம் சிக்கித் தவித்த பயணி...
சென்னையில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா: ஓடுதளத்தில் மற்றொரு விமானம்! திக் திக் நிமிடங்கள்.. நடந்தது என்ன?
சென்னையில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டபோது, ஓடுபாதையில் மற்றொரு விமானம் நின்றுகொண்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து தலைநகர் தில்லிக்கு 5 எம்.பி.க்கள் உள்பட 150 பயணிகளுடன் ஏர் இந்தியாவின் ஏஐ2455 விமானம் நேற்று இரவு புறப்பட்டுள்ளது. நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால், கட்டுப்பாட்டு அறையை விமானி தொடர்புகொண்டுள்ளார்.
இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டு, நள்ளிரவு 12.30 மணியளவில் மாற்று விமானம் மூலம் பயணிகள் தில்லிக்கு அனுப்பப்பட்டனர்.
விபத்து தவிர்ப்பு?
இந்த விமானத்தில் பயணித்த காங்கிரஸ் பொதுச் செயலாளரும் எம்பியுமான கே.சி. வேணுகோபால், விமானம் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பியதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கே.சி. வேணுகோபால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:
“திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் டர்பளன்ஸ் ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தில் சிக்னல் பிரச்னை இருப்பதால், சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்படவுள்ளதாக விமானி அறிவித்தார்.
ஆனால், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக உடனடி அனுமதி கிடைக்காததால் வானத்திலேயே 2 மணிநேரம் விமானம் வட்டமடித்தது. அனுமதி கிடைத்து முதல்முறை தரையிறக்க முயற்சி மேற்கொண்டபோது அதிர்ச்சி காத்திருந்தது. ஓடுபாதையில் மற்றொரு விமானம் நின்றுகொண்டிருந்தது. உடனடியாக நிலைமையை சுதாரித்து கொண்ட விமானி, விமானத்தை மேலே இயக்கியதால் அனைவரும் உயிர் தப்பினோம். இரண்டாவது முயற்சியில் பாதுகாப்பாக விமானம் தரையிறக்கப்பட்டது.
திறமையாலும் அதிர்ஷ்டத்தாலும் நாங்கள் காப்பாற்றப்பட்டோம். பயணிகளின் பாதுகாப்பு அதிர்ஷ்டத்தை சார்ந்து இருக்க முடியாது. இந்த சம்பவத்தை அவசரமாக விசாரித்து, பொறுப்புணர்வை சரிசெய்து, இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு விமானப் போக்குவரத்து துறையை கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து ஏர் இந்தியா தரப்பில் விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய கே.சி.வேணுகோபால், இந்த சம்பவம் குறித்து மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சக அதிகாரிகளிடம் பேசியுள்ளேன், விமானம் தரையிறக்கப்படும்போது ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருப்பதாக விமானியால் அறிவிக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.