சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் தகர்ப்போம்! பாகிஸ்தான் ராணுவ தளபதி
சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால், அதனை தகர்ப்போம் என்று அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி சையத் ஆசிம் முனீர் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
மேலும், காஷ்மீரை பாகிஸ்தானின் ’நாடி நரம்பு’ எனத் தெரிவித்த அஷிம், அது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை அல்ல, தீர்க்கப்படாத சர்வதேச பிரச்னை எனக் கூறியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இரண்டாவது முறையாக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி, அந்நாட்டின் பல்வேறு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்ற அவருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப், விருந்தளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது, இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ரீதியிலான மோதல் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதியின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், புளோரிடாவின் டம்பாவில் அமெரிக்க வாழ் பாகிஸ்தானியர்களுடன் ஆசிம் முனீர் நேற்று கலந்துரையாடியுள்ளார்.
அப்போது, ”சிந்து நதியில் இந்தியா அணை கட்டும் வரை நாம் காத்திருப்போம், அணை கட்டியவுடன் அதனை தகர்ப்போம்” என ஆசிம் முனீர் பேசியதாக பாகிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், ”சிந்து நதி என்பது இந்தியாவின் சொத்து அல்ல, நீர் உரிமைக்காக இஸ்லாமாபாத் எந்த எல்லைக்கும் செல்லும். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் பாகிஸ்தானின் இறையாண்மை மீறல். பாகிஸ்தானின் பதில் தாக்குதல் பரந்த மோதலை வெற்றிகரமாக தடுத்தது. இந்தியா - பாகிஸ்தான் மோதலை தடுக்க உதவிய டிரம்ப்புக்கு நன்றி.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு முன்னதாக ஒரு கூட்டத்தில் பேசும்போது, காஷ்மீரை பாகிஸ்தானின் நாடி நரம்பு என்று ஆசிம் முனீர் கருத்து தெரிவித்திருந்தார்.
அப்போது கண்டனம் தெரிவித்திருந்த இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர், காஷ்மீர் இந்தியாவின் யூனியன் பிரதேசம், சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க பயணத்தின்போது மீண்டும் காஷ்மீர் பாகிஸ்தானின் நாடி நரம்பு என்று ஆசிம் முனீர் தெரிவித்துள்ளார்.