தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: `சங்கத்தினர் அரசை ப்ளாக் மெயில் செய்கிறார்கள்!’ ...
SIR:``பீகார் துணை முதல்வரிடமும் 2 வாக்காளர் அடையாள அட்டைகள் இருக்கு" - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தப்பணியை மேற்கொண்டு வருகிறது.
பீகாருக்குப் பிறகு மேற்கு வங்கம், தமிழ்நாடு எனத் தேர்தல் நடைபெறவிருக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தப் பணி மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டது.
அதன் முதற்கட்டமாக பீகாரில் சுமார் 65 லட்சம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பானது. அதைத் தொடர்ந்து, ஆர்.ஜே.டி. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தச் சிறப்பு வாக்காளர் திருத்தப்பணிக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இதற்கிடையில், ஆர்.ஜே.டி கட்சித் தலைவரும், பீகாரின் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ்வின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்ற தகவல் இந்தியளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையின் மீது சந்தேகத்தை வலுப்படுத்தியது. அதற்குப் பிறகு தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது.
இந்த நிலையில், தேஜஸ்வி யாதவ் தன் எக்ஸ் பக்கத்தில், ``மோடி ஜியின் நெருங்கிய நண்பரான, பீகாரின் துணை முதல்வர் விஜய் சின்ஹா, இரண்டு மாவட்டங்களில் இரண்டு வெவ்வேறு EPICகள் (தேர்தல் புகைப்பட அடையாள அட்டை) வைத்திருக்கிறார்.
இதில் ஆச்சர்யப்படும் செய்தி என்னவென்றால், தேர்தல் ஆணையம் செயல்படுத்திய சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தப்பணிக்குப் பிறகு இது நடந்திருக்கிறது. இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? விஜய் சின்ஹாவா அல்லது தேர்தல் ஆணையமா? விஜய் சின்ஹா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? அவருக்கு இரண்டு வெவ்வேறு நோட்டீஸ்கள் வருமா அல்லது இந்த விதிகள் எதிர்க்கட்சிக்கு மட்டும்தானா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதற்குப் பதிலளித்த விஜய் சின்ஹா, ``நானும் தனது குடும்ப உறுப்பினர்களும் பாட்னாவில் முன்னதாகவே வாக்காளர்களாகப் பட்டியலிடப்பட்டிருக்கிறோம். இருப்பினும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் என் சொந்த ஊரான லக்கிசராய் சட்டமன்றத் தொகுதியில் எனது பெயரைச் சேர்க்க விண்ணப்பித்திருந்தேன்.
விண்ணப்பிக்கும்போது, பாட்னாவிலிருந்து எனது பெயரை நீக்கவும் ஒருபடிவம் எழுதி வழங்கினேன். ஏதோ காரணத்தால், பாட்னாவிலிருந்து எனது பெயர் நீக்கப்படவில்லை, அதனால் நான் BLO (பூத்-நிலை அதிகாரி)-ஐ அழைத்து எழுத்துப்பூர்வ விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருக்கிறேன். என்னிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளன. தேஜஸ்வி குழப்பத்தை விளைவிக்கிறார்." என்றார்.
இதைத் தொடர்ந்து தேஜஸ்வி யாதவ், ``SIR-க்குப் பிறகு வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலில், விஜய் சின்ஹா இரண்டு மாவட்டங்களில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார். இதில் விஜய் சின்ஹா முறையாகச் செயல்பட்டிருக்கிறார் என்றால், போலியான கையொப்பங்களின் அடிப்படையில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டு வெவ்வேறு வாக்காளர் அட்டையை தேர்தல் ஆணையம் எப்படி உருவாக்கியிருக்க முடியும்? இத்தனைக்கும் அவர் ஒரு மாநிலத்தின் துணை முதல்வர்.

தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே பா.ஜ.க ஆதரவாளர்களுக்கு இந்த முறையில் வாக்குகளைப் பதிவு செய்கிறதா? இரண்டு வாக்காளர் அடையாள அட்டையிலும் ஒரு பட்டியலில் 57 வயது, மற்றொரு பட்டியலில் 60 வயது என வயது வித்தியாசமாக இருக்கிறது. இது வயது மோசடி இல்லையா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.