செய்திகள் :

தேரும், விதையும், காதலும்! - வேள்பாரியை யாருக்கு தான் பிடிக்காது? | #என்னுள்வேள்பாரி

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

அறத்தோடும் ... கருணையோடும் ... வாழ்ந்த மனிதர்களை காலம் ஒருபோதும் மறப்பதில்லை. பிறரது கண்ணீரை துடைக்க நீளும் கரங்கள் போற்றுதலுக்குரியவை... அதுபோன்ற கரங்களை காலம் எப்போதும் முத்தமிட்டு கொண்டே இருக்கும். அப்படி முத்தமிட்டதன் விளைவுதான் வேள்பாரி...

வேள்பாரியை ஏன் அவ்வளவு பிடித்து போனது. அறத்தையும்... வீரத்தையும்... காதலையும் ஒரு நீரூற்று போல் சுரந்து கொண்டே இருந்த ஒரு மாமனிதனை யாருக்குதான் பிடிக்காது. பூக்கள் உதிர்ந்த சாலைகளில் தேர்கள் ஓடிக்கொண்டிருந்தபோது... முல்லை கொடி படர தன் தேரை ஈந்ததனால் காலங்கள் கடந்தும் பற்றி படர்கிறது பாரியின் புகழ் ...

வீரயுக நாயகன் வேள்பாரி

பாரியின் கருணையை சந்தேகம் கொண்டு பாரியை சந்திக்கும் நோக்கத்தில் அடர்ந்த காட்டு வழியே பயணிக்கிறார் கபிலர். அந்த நீண்ட பயணத்தில் கபிலரோடு இணைகிறான் நீலன். கபிலருக்கும் ... நீலனுக்குமான அந்த உரையாடலில் மலை மேல் இருக்கும் மக்களை குறைத்து மதிப்பிடுவதற்காக கபிலர் நீலனிடம் கேட்கிறார்.
                "நீ கடலை பார்த்திருக்கிறாயா...?" அதற்கு நீலன்" இல்லை" என்க,

இப்போது கபிலர் "மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் கடலை பார்க்க வேண்டும்".

மீண்டும் நீலன்" அது எப்படி இருக்கும்"

கபிலர் "அது மிகவும் பரந்து விரிந்தது... அளவிட முடியாதது" என்கிறார்.

அதற்கு நீலன்" எங்கள் பாரியின் கருணையை விடவா... " எனச் சொல்லும்போது தத்தளித்து நின்றது கபிலர் மட்டுமல்ல... நானும்தான்...

தங்களது பெருமையை எடுத்தாள கபிலர் பயன்படுத்திய சொல்லாடலை ... தங்களது தலைவனின் பெருமையை கூறுவதற்கு அதேவேகத்தில் திருப்பியடித்த நீலனின் கைகளில் சுமந்தலைந்தது ஈட்டியல்ல... பாரியின் இதயம்... அந்த ஒரு சொல்லாடல்தான் பாரியின் மேலான காதலை பூக்க செய்தது. ஒரு சொல்லில் ஒருவரது ஒட்டுமொத்த பண்புகளையும் அடக்கிவிட முடியுமா? முடித்திருக்கிறார் ஆசிரியர் ...

பாரி என்ற பெருங்கடலில் அப்போது விழுந்தவன்தான் இப்போதுவரை எழும்பவேயில்லை. நீச்சலடிப்பது சுகமா என்றால்... சுகந்தான். அந்த கடல் பாரியானால்...

முன்பெல்லாம் காடு... மலைகளை பார்த்தால் அது வெறும் காடு... மலை... அவ்வளவுதான். இப்போதல்லாம் அவை எல்லாமே பாரி. வளர்ந்து நிமிர்ந்த மரங்களெல்லாம் பாரியின் பரந்து விரிந்த கைகள் ... அவையெல்லாம் பாரி விதைத்த விதைகள்... காட்டில் ஒரு மரத்தை கட்டி தழுவினால் அது பாரியை கட்டி தழுவுவது... பாறைகளில் புரண்டு எழுந்தால் அவன் காலடிச்சுவடுகளை முத்தமிட்டு நிமிர்வது...

கபிலரை சுமந்தலைந்த நாட்களெல்லாம் எவ்வியூரில் திருவிழாதான். அந்த திருவிழாவில் தொலைந்து போன சிறுபாணன் நான். அன்பு செய்வது கலை ... பெருங்கலை... அதை பாரியிடமிருந்தே கற்றுக்கொண்டேன். நாம் அள்ளி கொடுக்கும் அன்பில் அன்பை பெறுபவர் நாண வேண்டும். இந்த அன்புக்கு நான் தகுதியானவன்தானா எனத் தத்தளிக்க வேண்டும். கடல் கொண்டு மடக்க பார்த்த கபிலரும் பாரியின் அன்பெனும் பெருங்கடலில் கரையேற முடியாமல் தத்தளித்தே கிடக்கிறார்...

அருவி நீராடலுக்கு பிறகு, முடி காய சிறுபாறையில் ஏறி நிற்கும் பாரிக்கும் ... ஆதினிக்கும் இடையில் நிகழும் அந்த உரையாடல்... அடடா... அதில்தான் எவ்வளவு கவித்துவம்... காதல்... பாரிக்கும் ஆதினிக்கும் காதல் பூக்கின்ற இடங்களிளெல்லாம்... பாரியின் காதல்கண்டு ஆண் நான் எத்தனை முறை ஆதினியாவது...

எத்தனையோ குலங்கள் பறம்பு மண்ணில் ஆடி பாடி மகிழ்ந்து போயிருக்கிறார்கள். ஆனால் மதங்கர் கூட்டம் மட்டும் வரவேயில்லையே... இது பாரியின் ஏக்கம். ஒருநாள் அவர்களும் வருகிறார்கள். ஆடிப்பாடுகிறார்கள். ஆடிப்பாடி மகிழ்வித்த மதங்கன் கேட்கிறான் " எங்களுக்கு கொல்லிக்காட்டு விதை வேண்டும் ..."

பறம்பின் ஆதிப்பொருள் குலம் தாண்டக்கூடாது... இது குலநாகினி வாக்கு. இரந்து கேட்கையில் எதுவாயினும் கொடுப்பதுதான் தலைவனுக்கு அழகு... அது உயிராயினும்...

மதங்கனின் வடுவேறிய கைகளை பிடித்து வருடி கொண்டே "எவ்வளவு வேண்டுமோ எடுத்து கொள்ளுங்கள்" எனச்சொல்லும்போது எனது உதடுகள் பாரியின் கரங்களை முத்தமிட்டிருந்தது. மதங்கன் அள்ளிய விதைகளில் என் கண்ணீர் துளிகள் கலந்தது ... இந்த மண்ணெங்கும் சிந்தப்பட்ட குருதியும் ... கண்ணீரும் ... இன்னும் உலராமல் உனது உள்ளங்கையில் இருக்கின்றன பாரி... என கபிலர் சொன்ன வார்த்தைகள் ஒரு அலையாய் மோதி மோதி திரும்பியது...

தீக்களி பூசிக்கொண்டு தழல்மாலை சூடி ஆடுவது தனது மகள்தான் எனத் தெரிந்து கொண்டு அவள் காதலை எண்ணி... கலவையில்தானே புதுமைகள் பூக்கும் என மகிழ்வானே பாரி. அப்பப்பா... அவன்தான் அப்பா. தந்தையானால் அப்படிதான் மகளின் காதலை எண்ணி களிக்க வேண்டும்.

எழுதி தீராதது பாரியின் கருணை ... கருணை பொங்கும் அவனது கரங்கள் சோமபூண்டு இடுகின்ற மாபெரும் தாழி ... அதில் கருணை சோமபூண்டு பானத்தை போல் பொங்கிக்கொண்டே இருக்கிறது ...

பாரியோடு கள் அருந்தும் நாள்தான் வாழ்வின் திருநாள்... கள் மட்டுமல்ல... காதலையும் பாரியின் கரங்களால்தான் பருக வேண்டும்...

கால்கள் தளர்ந்து ... கசங்கி விழுந்து எழுந்தவரை தோளிலே சுமந்து நடந்தான் பாரி... ஒரு பொழுதில் கபிலரை தோளிலிருந்து இறக்கிவிட்டான் பாரி. அதன் பிறகு நான் சுமக்கலானேன் பாரியை என் நெஞ்சத்தில்.... இன்றுவரை இறக்கவேயில்லை அவனை ... இறக்கவேயில்லை அவனும் ...

இது போன்றதொரு காப்பியம் படைத்தமைக்காக ஆசானுக்கு அன்பும்... நன்றியும்...

மருதன் பாலமுருகன் ...
பனங்குளம்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடன் தந்த தாய் மாமன் சீர்! - ஒரு நெகிழ்வனுபவம் | #நானும்விகடனும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கற்பனையிலேயே சோமபான வாசனையை முகர்ந்த அதிசயம்! - பறம்பின் பெருங்காவியம் | #என்னுள்வேள்பாரி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

8.8.88 விகடன் சிறப்பிதழால் வந்த ஆசை - அண்ணாசாலையில் கால்கடுக்க நடந்த தருணம் | #நானும்விகடனும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க