Maareesan: "அத்தருணத்தில் தான் ஒரு அற்புதமான நடிகர் என்பதைக் காட்டினார்" - வடிவே...
உத்தரகண்டில் மஞ்சள் எச்சரிக்கை: மீட்பு பணியில் தொய்வு!
உத்தரகண்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை மேகவெடிப்பால் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தராலி கிராமம் நிலச்சரிவில் புதைந்தது. இந்த இயற்கை சீற்றத்தால் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதிலும், மண்ணுக்கள் புதைந்ததிலும் 4 போ் உயிரிழந்ததாகவும், 70 போ் மாயமாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதில், 15 பாதுகாப்புப் படை வீரா்களும் அடங்குவா்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 49 பேர் காணாமல் போனதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. சிலபகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் கிட்டத்தட்ட பாதி கிராமமே புதைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தராலியைச் சுற்றியுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இணைக்கும் கங்னானி அருகே முக்கியமான பெய்லி பாலம் ஓரளவு செயல்பாட்டு வந்துள்ளது. இருப்பினும், கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையின் பல இடங்களில் தடைபட்டுள்ளது. இடிபாடுகளை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், செவ்வாய், புதன்கிழமைக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்றும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி டேராடூனில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சோங்காட், தப்ரானி, ஹர்சில் ஆகிய இடங்களில் நெடுஞ்சாலை தடைபட்டுள்ளது. இதனிடையே உத்தரகண்ட் முழுவதும் பகலில் மழை பெய்யும் என்று ஐஎம்டி 'மஞ்சள்' எச்சரிக்கை விடுத்துள்ளது. அல்மோரா, டேராடூன், ஹரித்வார், நைனிடால், பௌரி, உதம் சிங் நகர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என 'சிவப்பு' எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
டேராடூனில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. உத்தரகாசியிலும் மழை பெய்தது. பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு ஒரு உணவகம் இருந்த இடத்தின் இடிபாடுகளை தோண்டி வருவதாக தராலியில் உள்ள இந்திய-திபெத்திய எல்லை காவல் துறை அதிகாரி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இடங்களை உத்தரகாசி மாவட்ட நீதிபதி பிரசாந்த் ஆர்யா, இன்று காலை ஹர்சிலுக்குச் சென்று, திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உருவான ஏரியின் நீர்மட்டத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளை ஆய்வு செய்தார்.
இந்த வெள்ளப்பெருக்கு அப்பகுதியில் உள்ள ஒரு ராணுவ முகாமுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.