தில்லியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணிக்கு அனுமதி மறுப்பா?
பொள்ளாச்சி: புலம்பெயர் தொழிலாளர் கொலை வழக்கில் திருப்பம்; மேற்கு வங்க இளைஞர் கைதின் பின்னணி என்ன?
கோவை மாவட்டம், பொள்ளாச்சி சின்னம்பாளையம் பகுதியில் கடந்த மாதம் 31-ம் தேதி அடையாளம் தெரியாத ஒரு ஆண் சடலம் கண்டறியப்பட்டது.
உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், பொள்ளாச்சி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடல் முழுவதும் காயங்கள் இருந்த நிலையில், பிரேதப் பரிசோதனை முடிவில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அதில் கொலை செய்யப்பட்டவர் மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் தாஸ் (30) என்று தெரிந்தது. இவர் பொள்ளாச்சியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தார்.

அவருடன் பணியாற்றி வந்த சிலர் கடந்த 10 நாள்களாக மாயமானதாக தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக காவல்துறையில் சிறப்புப் படை அமைக்கப்பட்டது. அவர்கள் மேற்கு வங்கம் சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது ராகேஷ் தாசுடன் பணியாற்றிய பிரமதா பிஸ்வாஸ் என்பவரைப் பிடித்து விசாரணை செய்ததில், அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், பிஸ்வாஸ் உள்ளிட்ட 4 பேர் இணைந்து ராகேஷைக் கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பிரமதா பிஸ்வாஸை பொள்ளாச்சி அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். தலைமறைவாகவுள்ள மற்ற 3 பேரைத் தேடும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.