கோவை: "என் செல்போன மொத தாங்க" - அந்தரங்க புகைப்படத்தை வைத்து பெண்ணை மிரட்டிய இளைஞர் கைது
கோவை குனியமுத்தூர் காவல் சரகத்துக்குட்பட்ட கோவைப்புதூர் பகுதியில் 39 வயது பெண் திருமணமாகி தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர்கள் தங்களின் காரை தனியார் கால் டாக்ஸி நிறுவனத்துடன் இணைத்துள்ளனர்.

அந்தக் காருக்கு அதே கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்த சமீர் (27) என்ற இளைஞரை டிரைவராகவும் நியமித்துள்ளனர். பணியில் சேர்ந்த 3 நாள்களான நிலையில், அவர் கடந்த 8-ம் தேதி தன் செல்போன் பழுதாகியுள்ளதாகக் கூறி பெண்ணிடம் செல்போன் கேட்டுள்ளார்.
இந்த வேலைக்கு செல்போன் முக்கியம் என்பதால், அந்தப் பெண் தன்னுடைய பழைய போனில் உள்ள போட்டோ, வீடியோக்களை நீக்கிவிட்டு சமீரிடம் கொடுத்துள்ளார்.
அன்றைய தினம் இரவு 10 மணியளவில் சமீர் அந்தப் பெண்ணுக்கு செல்போனில் அழைத்துள்ளார்.
“உங்களின் நிர்வாண புகைப்படத்தை செல்போனில் பார்த்தேன். மிகவும் அழகாக இருக்கிறீர்கள்.” என்று கூறியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த பெண், “எதற்காக என்னுடைய தனிப்பட்ட விஷயங்களைப் பார்க்கிறீர்கள். செல்போனை உடனடியாக ஒப்படையுங்கள்” என்று கூறியுள்ளார்.
இரவு 11 மணியளவில் சமீர் பெண்ணின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண், “எதற்காக என்னிடம் அப்படிப் பேசினீர்கள்” என்று கேட்டுள்ளார்.
செல்போனைக் கொடுக்காமல் சமீர், “நீங்கள்தான் என்னிடம் ஏதோ எதிர்பார்க்கிறீர்கள்.” என்று தகாத வார்த்தைகளில் பேசி அத்து மீறியுள்ளார்.

அந்த நேரத்தில் கணவர் அலுவலகத்தில் இருந்ததால், அவர் அக்கம் பக்கத்தினர் உதவியை நாடியுள்ளார். அவர்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், சமீரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.