'கூலி'-க்கு தொடக்கப் புள்ளி வைத்த அனிருத் வீட்டு ரஜினி பெயின்டிங் - அனிருத் பகிர...
Relationship: 'எடுப்பார் கைப்பிள்ளையா இருக்கீங்களா?' - உறவுகளைக் கெடுக்கும் அதரப்பழசான இந்த இயல்பு!
ஒரு ரிலேஷன்ஷிப்பை ஒண்ணு சம்பந்தப்பட்டவங்களே கெடுத்துப்பாங்க. இல்லைன்னா அடுத்தவங்க கெடுப்பாங்க. இதுல நாமதான் கெடுத்துக்கிறோம்/ கெடுக்கிறோம்னு தெரிஞ்சும் செய்யலாம்; தெரியாமலும் செய்யலாம். ஆனா, இவையெல்லாம் காரியங்கள்தான். இதுக்குப்பின்னாடி இருக்கிற முக்கியமான ஒரு காரணத்தைத்தான் நாம இன்னிக்குத் தெரிஞ்சுக்கப் போறோம். அதுக்குப்பேரு ‘எடுப்பார் கைப்புள்ள.’
தான் சம்பந்தப்பட்ட விஷயங்கள்லேயே சுயமா முடிவெடுக்கத் தெரியாம, அடுத்தவங்க சொல்றதையும் தப்பா, சரியான்னு யோசிக்காம அப்படியே நம்பி அத ஃபாலோ பண்றவங்களை எடுப்பார் கைப்புள்ளன்னு சொல்லலாம். இந்தக் காலத்துக்கு ஏத்தபடி சொல்லணும்னா, ‘ஈஸியா இன்ஃப்ளூயன்ஸ்’ ஆகுறவங்கன்னு சொல்லலாம்.

ஒரு ஃப்ரெண்ட்ஸ் குரூப்ல ஒரு பையனும் ஒரு பொண்ணும் லவ் பண்ணிக்கிட்டிருக்காங்க. அதே குரூப்ல அந்தப் பையன் மேல கிரஷ்ஷோட ஒரு பொண்ணும் இருக்கா. லவ் பண்றவங்களுக்கு நடுவுல ஒரு சின்ன பிரச்னை வருது. வழக்கமான பொசசிவ்னெஸ் பிரச்னைதான்.
பையன் புரிய வைக்கப் பார்க்கிறான். பொண்ணு கொஞ்சம் ஊடல்ல இருக்கா. நேரம் பார்த்து, கிரஷ்ஷோட இருக்கிற பொண்ணு ‘அவன் கேரக்டரே அப்படித்தான். உன்னை லவ் பண்ணதுக்கு அப்புறம் திருந்திட்டான்னு நினைச்சேன். திருந்தலைப்போல’ன்னு சொல்ல, லவ் பண்ற பொண்ணுக்குக் கோவம் தலைக்கு ஏறிடுச்சு. கூடவே சந்தேகமும்.
’நான் சந்தேகப்பட்டது சரிதான். அவனை இன்னிக்கு உண்டு இல்லைன்னு பண்ணிடுறேன் பார்’னு கிளம்ப, க்ரஷ் பொண்ணோ ’நான் சொன்னேன்னு சொல்லிடாத; அப்புறம் என்னை நம்ப மாட்டியான்னு அதுக்கும் உன்னைத்தான் திட்டுவான். உன் நல்லதுக்காகத்தான் சொல்றேன்’னு சொல்ல, லவ் பண்ணிக்கிட்டிருக்கிற பொண்ணு இன்ஃப்ளூவன்ஸ் ஆகிட்டா.
விளைவு, முதல்ல தன்னோட சந்தேகம் சரியான்னு கிளியர் பண்ணிக்க வேண்டியவ அதையே செய்யல. என் லவ்வரைப்பத்தி ஏன் இவ முதல்ல சொல்லல; இப்போ ஏன் சொல்றா; அவன் தப்பான கேரக்டரா இருந்தா அது எப்படி இவ்ளோ நாள் எனக்குத் தெரியாம போச்சுன்னு அந்தப் பிரச்னையைச் சுயபுத்தியோட எல்லா ஆங்கிள்ல இருந்தும் யோசிக்க தவறிடுறா.
இதோட முடிவு என்ன வேணும்னாலும் இருக்கட்டும். ஆனா, அந்தப் பையன் நல்லவனா இருந்தா, இந்தப் பொண்ணுக்கு அது எவ்ளோ பெரிய இழப்பா இருக்கும்..? இந்தப் பொண்ணு இடத்துல பையனையும் வெச்சுக்கலாம்.

இனி ஒரு யங் கப்புள் வாழ்க்கைக்குள்ள போவோம். பெத்தவங்க பார்த்து செஞ்சு வெச்ச கல்யாணம். நிச்சயத்துக்கும் கல்யாணத்துக்கும் நடுவுல இருந்த ரெண்டு மாச கேப்ல அவங்களுக்குள்ள சின்னதா ஒரு காதல்கூட வந்திடுது. எல்லாத்தையும் பார்த்துக்கிட்டிருந்த பொண்ணோட அம்மா, ‘உன் வீட்டுக்காரனுக்கு பிசினஸ்ல அவன் அக்காதான் ஹெல்ப் பண்ணிட்டிருக்காளாம்.
நீ போனதும் அத நீ செய்ய ஆரம்பி. அப்புறம் பிசினஸ்ல எனக்கும் ஷேர் இருக்குன்னு உன் நாத்தனார்க்காரி பிரச்னை பண்ணப்போறாடி’ன்னு பத்த வெச்சிருக்காங்க.
அந்தப்பக்கம் மாப்பிள்ளையோட அம்மா தன் பொண்ணுகிட்ட, ’வர்றவ நல்லா படிச்சவடி. எப்படியும் உன் தம்பியோட பிசினஸுக்குள்ள வர பார்ப்பா. விட்டுறக்கூடாதுடி’ன்னு போருக்குத் தயாராகுறாங்க. கல்யாணம் நடக்குது.
சொந்தப்புத்தியில்லாம, அம்மாவோட எடுப்பார் கைப்புள்ளையா புருஷன் வீட்டுக்குள்ளப்போற பொண்ணு, ஒரு வாரத்துக்குள்ளேயே உங்க அக்கா இனிமே நம்ம கம்பெனிக்குள்ள வரக்கூடாதுன்னு பிரச்னை செய்ய ஆரம்பிச்சிருக்கா. ஏற்கனவே யுத்தத்துக்கு ரெடியா இருந்த மாமியாரும், நாத்தனாரும் களத்துல இறங்க... குடும்ப நிம்மதி போயே போச்சு.

இன்னொரு குடும்பம். மனைவியையும் ரெண்டு குழந்தைகளையும் அம்மா, அப்பா கிட்ட விட்டுட்டு, கணவன் வெளிநாட்ல வேலை பார்த்திட்டு இருந்திருக்கார். எல்லாமே நல்லாதான் போயிருக்கு. சில வருஷங்ளுக்கு முன்னாடி லவ் மேரேஜ் செஞ்சிக்கிட்டு வீட்டை விட்டுப்போன பொண்ணு, ரெண்டு குழந்தைகளோட கணவரைப் பிரிஞ்சி அம்மா வீட்டுக்கு வர, நிலைமை தலைகீழா மாறிடுது.
’காபித்தூள் தீர்ந்துப்போச்சு; இன்னிக்கு டீ போட்டு தர்றேன்’கிற இயல்பான வார்த்தைகளைக்கூட, ‘உன் மருமக அவளுக்கு மட்டும் காபி போட்டுக்கிட்டா. எனக்குத் தரலை’ன்னு நாத்தனார், மாமியார்கிட்ட சொல்ல, இங்க மாமியார் எடுப்பார் கைப்புள்ளையா மாறுகிறாங்க.
கூடவே, ’எல்லாம் என் புருஷன் சம்பாதிச்சதுன்னு உன் பொண்டாட்டி பேசுறாடா. உன் தங்கச்சி காபி குடிக்கிறதையே நிறுத்திட்டாடா. நாங்க உயிரோட இருக்கிறப்போவே உன் பொண்டாட்டி இந்தப் பேச்சு பேசுறா. நாங்க கண்ணை மூடிட்டா உன் கூடப்பிறந்தவ நிலைமை என்னாகுறது.
அதான் சொத்தையெல்லாம் அவ பேர்லேயும் அவ பிள்ளைங்க பேர்லேயும் எழுதலாம்னு முடிவு பண்ணிட்டோம்னு சொல்ல, இங்க கணவன் எடுப்பார் கைப்புள்ளையா மாறுகிறான். விளைவு, மனைவிக்கு போனை போட்டு என்ன நடந்துச்சுன்னு கேக்காம, அம்மா சொன்னதெல்லாம் நிஜம்னு நம்பி மனைவியைத் திட்ட, விளைவு இந்தக் குடும்பத்தோட நிம்மதியும் போச்சு.
அது காதலோ, கல்யாணமோ, ஒரு ரிலேஷன்ஷிப்போட மகிழ்ச்சியைக் குழி தோண்டி புதைக்கிறது, ரெண்டு பேர்ல ஒருத்தரோட இந்த ‘எடுப்பார் கைப்பிள்ளை’ கேரக்டராகவும் இருக்கலாம். கொஞ்சம் கவனமா இருந்துக்கோங்க..!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...