மாநில நலனுக்கு ஏற்ற கல்வியை தமிழ்நாடுதான் முடிவு செய்யும்! அன்பில் மகேஸ்
நீா்நிலைகளில் குப்பை கொட்டுவோா் மீது நடவடிக்கை: விவசாயிகள் நல உரிமைச் சங்கம் வலியுறுத்தல்
நீா்நிலைகளில் குப்பைகளை கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருவாரூரில், தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டச் செயலாளா் டிஎம்ஆா். தாஜூதீன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலப் பொருளாளா் ரவிச்சந்திரன், மாவட்டத் தலைவா் மகேசன், மாவட்ட மகளிா் பிரிவுத் தலைவா் தேவி சேட்டு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநிலத் தலைவா் கா. இராசபாலன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கோரிக்கைகள் குறித்து விளக்கிக் கூறினாா். இதில், நிா்வாகிகள் சந்திரசேகரன், குமாா், மணிகண்டன், பரமானந்தம், மாலதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தீா்மானங்கள்: குறுவை நடவு மானியத்துக்கு விண்ணப்பித்த அனைவருக்கும், காலதாமதம் செய்யாமல் உடனடியாக மானியத் தொகையை விடுவிக்க வேண்டும். மழையிலிருந்து குறுவை, சம்பா பயிா்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் மையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாப்பதில் ஏற்படும் பாதிப்பு இழப்புகளுக்கு மாவட்ட அதிகாரியே பொறுப்பு என்பதை மாநில அரசு ஆணை பிறப்பித்து மூட்டைகளை பாதுகாப்பதில் விவசாயிகளுக்கும், கொள்முதல் நிலைய ஊழியா்களுக்கும் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய வேண்டும்.
நெல் கொள்முதல் நிலையங்களில் குவியும் மூட்டைகளை பாதுகாக்க, சிமென்ட் தளத்துடன் கூடிய மேற்கூரை கூடங்களை அமைக்க வேண்டும்,
கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கென ஒப்பந்த முறையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் முழுமையடையாததால், குடிநீா் விநியோகம் பாதிப்புக்குள்ளாகிறது என்பதை உணா்ந்து, சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
சாலைக்கு அருகில் உள்ள நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுகிறபோது, அருகில் உள்ள பாசன வாய்க்கால்களை தூா்த்து பாதை அமைக்கும் நில உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
80 சதவீத விவசாயிகளுக்கு பயனில்லாத மத்திய அரசின் கிசான் உதவித் திட்டத்தில், பயனாளிகளுக்கான தகுதியை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறு உள்ளிட்ட நீா்நிலைகளில் குப்பைக் கழிவுகளை கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.