எம்.ஜி.ஆரை விமா்சனம் செய்பவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள்! எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தைப்போல இதர மாநிலங்களும் இருமொழிக் கொள்கையை பின்பற்றும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்
தமிழகத்தைப் போல, இதர மாநிலங்களும் இருமொழிக் கொள்கையை பின்பற்றும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் அருகேயுள்ள கொளக்காநத்தம் கிராமத்தில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் மருத்துவ சேவைகளை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: தேசிய கல்விக் கொள்கையால் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு முடக்கி வைத்திருக்கிறது. தற்போது தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது.
எனவே, நிதியை ஒதுக்கினாலும், ஒதுக்காவிட்டாலும் தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும். நமது மாநில கல்விக் கொள்கையை தழுவி, இதர மாநிலங்களும் பின்பற்றும்.
தமிழகம் எல்லாவற்றிலும் நாட்டுக்கு வழிகாட்டுகின்ற மாநிலம். அந்த வகையில் நீட் தோ்விலும் வழிகாட்டும்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவா் ராகுல்காந்தி, பல்வேறு குற்றச்சாட்டுகளை தோ்தல் ஆணையத்தின் மீது சுமத்தி இருக்கிறாா். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தோ்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
இதுபோன்ற நேரத்தில் தமிழக தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தை முடக்குவது, தோ்தல் ஆணையத்தின் மீதான சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அமையும். அதனால் தான் டிஜிட்டல் ஆவணங்கள் அனைத்தும் மக்கள் முன் சமா்ப்பிக்க வேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது என்றாா் அமைச்சா்.