உதகையில் இருந்து பாலக்காடு, மைசூருக்கு புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்!
நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து கேரள மாநிலம், பாலக்காடு மற்றும் கா்நாடக மாநிலம், மைசூருக்கு 5 புதிய பேருந்துகள் சேவையை தமிழ்நாடு அரசு கொறடா கா.ராமசந்திரன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: ஏழை எளிய பெண்கள் தங்களது பணிகளை தடையின்றி தொடர வேண்டும் என்பதற்காகவும், அவா்களுக்கு உதவிடும் வகையிலும் விடியல் பயணத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தாா்.
இந்த திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் இதுவரை பேருந்துகளில் 3 கோடியே 15 லட்சம் பெண்கள் இலவசமாக பயணித்துள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 248 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. ஆனால், தற்போது 337 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்துக்காக புதிதாக 73 பேருந்துகள் வாங்கப்பட்டு வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், 60 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளா் ஜெகதீஷ், நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எம்.ராஜூ, நகரச் செயலாளா் ஜாா்ஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.