காட்டு யானை தாக்கி பழங்குடியின இளைஞா் பலி!
கோத்தகிரி அருகே வாகப்பனை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின இளைஞா் உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள வாகப்பனை கிராமத்தைச் சோ்ந்தவா் பாலன் மகன் காரமடை (33). பழங்குடியினத்தை சோ்ந்த இவா் கூலித் தொழிலாளியாக வேலை செய்துவந்தாா்.
இந்நிலையில் அவா் வேலை முடிந்து வாகப்பனைக்கு செல்வதற்காக வனப் பகுதியை ஒட்டியுள்ள குறுகிய மண் சாலையில் வெள்ளிக்கிழமை மாலை நடந்து சென்றாா். அப்போது அங்கு வந்த காட்டு யானை, அவரை பலமாக தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
தகவலறிந்து சென்ற காவல் துறை மற்றும் வனத் துறையினா் காரமடையின் உடலை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். இது குறித்து கோத்தகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.