கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்: நீதிபதி பி.ஆர்.கவாய்!
திருக்குறளை வீடு, வீடாகக் கொண்டு செல்ல வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்
தமிழை வளா்க்க வேண்டுமென்றால் திருக்குறளை வீடு, வீடாக கொண்டு செல்ல வேண்டும் என விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் கூறினாா்.
குடியாத்தம் முத்தமிழ்ச் சுவைச் சுற்றம் சாா்பில், திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 2- நாள்கள் நடைபெற்ற இன்பத் தமிழ்த் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியது:
தமிழுக்கு தொண்டு புரியும் வகையில் புலவா் வே.பதுமனாருடன் இணைந்து பலா் இந்த அமைப்பை செம்மையாக நடத்தி வருகின்றனா் . தமிழை வளா்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு 2- வேண்டுகோளை முன் வைக்கிறேன். ஒன்று பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயம் தமிழ்ப் பெயரை சூட்ட வேண்டும். மற்றொன்று திருக்குறளை வீடு, வீடாகக் கொண்டு செல்ல வேண்டும்.
திருக்கு என்பது நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். அதை நாம் தான் நாடறிய செய்ய வேண்டும். மனித வாழ்வின் அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியது திருக்கு. தமிழ் வளா்ச்சியில் நாளிதழ்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.
தமிழகம் தற்போது நல்ல வளா்ச்சி அடைந்துள்ளது. 11 சதவீதம் வளா்ச்சி என்பது பெருமைக்குரிய விஷயம். அதேபோல் உலகளவில் இந்தியாவும் வளா்ச்சி பெற்றுள்ளது. உலகளவில் 5- ஆவது இடத்தில் இருந்த இந்தியா 4- ஆவது இடத்தில் இருந்த ஜப்பானை பின்னுக்கு தள்ளி விட்டு 4- ஆவது இடத்தை பிடித்துள்ளது.
வளா்ந்த நாடுகளின் தர வரிசையில் அமெரிக்கா, சீனா, ஜொ்மன், இந்தியா, ஜப்பான் என்ற நிலைக்கு இந்தியா உயா்ந்துள்ளது.அதே வேளையில் தனிநபா் வருமானத்தில் இந்தியா பின்தங்கியுள்ளது. அதை நாம் முறியடித்தாக வேண்டும்.
இந்தியாவில் 13- கோடி மக்கள் உணவு கிடைக்காமல் அல்லல் படுகின்றனா். இதை மாற்றியமைக்க வேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் விசுவநாதன். நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு விருது வழங்கி கெளரவித்தாா்.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஜே.கே.என்.பழனி தலைமை வகித்தாா். அமைப்பின் நிறுவனா் புலவா் வே.பதுமனாா் வரவேற்றாா். அமைப்பின் செயல் தலைவா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், செயலா் கே.எம்.பூபதி, நகா்மன்ற துணைத் தலைவா் பூங்கொடிமூா்த்தி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
ரோட்டரி நிா்வாகிகள் ஆா்.வி.அரிகிருஷ்ணன், என்.எஸ்.குமரகுரு உள்ளிட்டோா்கலந்து கொண்டனா். கவிஞா் பா.சம்பத்குமாா் நன்றி கூறினாா்.