இந்திய விமானங்களுக்கான தடையால் பாகிஸ்தானுக்கு ரூ.410 கோடி இழப்பு!
பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால், அந்நாட்டுக்கு 2 மாதங்களில் ரூ.410 கோடி (பாகிஸ்தான் ரூபாய்) இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரலில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகான பதற்றத்தால், இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க தடை விதித்தது. இந்தியாவும் பாகிஸ்தான் விமானங்களுக்கு எதிராக இதே போன்ற தடையை விதித்தது.
பின்னா், மே மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மற்றும் இரு தரப்பு ராணுவ மோதலால் நிலைமை மேலும் மோசமடைந்தது. இதையடுத்து, பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்களுக்கான தடையை அந்நாடு நீட்டித்தது.
இந்த நடவடிக்கையால், கடந்த ஏப்ரல் 24 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து ஆணையத்துக்கு ரூ.410 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தகவலை, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்ததாக ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா தவிர மற்ற அனைத்து நாடுகளின் விமானங்களும் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.