ஆப்கனில் ஐ.நா. பணியிலுள்ள பெண்களுக்கு கொலை மிரட்டல்: தலிபான் அரசு விசாரணை!
ஆப்கானிஸ்தானில் தங்களின் அமைப்பில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து, இதுதொடா்பாக தலிபான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடந்த 2021-இல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, ஆப்கானிஸ்தானில் பெண்களுக்குப் பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 2022 டிசம்பரில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தன்னாா்வ தொண்டு நிறுவனங்களில் (என்ஜிஓ-க்கள்) பெண்கள் பணிபுரிய தலிபான்கள் தடை விதித்தனா்.
தலிபான்களின் ஆடை கட்டுப்பாடுகளைப் பெண்கள் பின்பற்றாததால், தொண்டு நிறுவனங்கள் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதைத் தவிா்க்குமாறும் உத்தரவிடப்பட்டது. அடுத்த 6 மாதங்களில் ஐ.நா.வுக்கும் இத்தகைய தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. உதவி இயக்கம் அண்மையில் வெளியிட்ட மனித உரிமைகள் குறித்த அறிக்கையில், கடந்த மே மாதம் ஐ.நா.வில் பணிபுரியும் ஆப்கானிய பெண்களுக்கு அவா்களது பணி காரணமாக கொலை மிரட்டல்கள் வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பெண் ஊழியா்களின் பாதுகாப்புக்காக ஐ.நா. அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த மிரட்டல்கள் தொடா்பாக ஐ.நா. சபைக்கு தலிபான்கள் அளித்த விளக்கத்தில், இந்த அச்சுறுத்தல்களுக்கு தலிபான் படையினா் பொறுப்பல்ல. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது என்று கூறியுள்ளனா்.
மேலும், ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீதான பிற கட்டுப்பாடுகளையும் ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஹெராத் மாகாணத்தில் பெண்கள் பா்தா அணியுமாறு கட்டாயப்படுத்தப்படுவதாகவும், உருஸ்கானில் ஹிஜாப் மட்டும் அணிந்ததற்காக பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல மாகாணங்களில் பெண்கள் பொது இடங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காந்தஹாரில் பெண் சுகாதாரப் பணியாளா்கள் ரத்த உறவுமுறையான ஆண் பாதுகாவலா் இல்லாமல் வேலைக்கு வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்கள் பெண்களின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதைக் காட்டுவதாக அறிக்கை தெரிவிக்கிறது.