மீண்டும் அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி: அமெரிக்க தலைவர்களுடன் சந்திப்பு!
பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஆபரேஷன் சிந்தூருக்குப்பின் இரண்டாவது முறையாக மீண்டும் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ராணுவ உயரதிகாரிகளையும், முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
முன்னதாக கடந்த ஜூன் மாதம், ஆசிம் முனீர் 5 நாள்கள் பயணமாக அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபர் டிரம்ப்பை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, வெள்ளை மாளிகையில் அவருக்கு அதிபர் டிரம்ப் விருந்தளித்தார்.
இந்தநிலையில், அவரது இந்த திடீர் பயணம் எதற்காக என்பது குறித்தும் அவர் எத்தனை நாள்கள் அங்கிருப்பார் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனிடையே, ஆசிம் முனீர் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளி மக்களிடையே உரையாற்றியிருப்பதும் கவனிக்கத்தக்கது. அப்போது அவர், ‘பாகிஸ்தானுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாகவும், பாகிஸ்தானில் அதிக முதலீடு செய்யவும்’ அழைப்பு விடுத்துள்ளார்.
டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பாகிஸ்தானுடன் அதிக நெருக்கம் பாராட்டி வருவதை இந்தச் சந்திப்பு பிரதிபலிக்கிறது. பாகிஸ்தானின் தலைமைப் பதவிக்கு ஆசிம் முனீர் இலக்கு நிர்ணயித்து செயல்படுவதாக அந்நாட்டின் அரசியல் வட்டாரங்கள் எதிரொலிக்கும் நிலையில், அதை மெய்ப்பிக்கும் விதத்தில் மேற்கண்ட செயல்பாடுகள் அமைந்துள்ளதும் கவனிகத்தக்கது.