இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் பாகிஸ்தானுக்கு இரண்டே மாதங்களில் ரூ.123 கோடி இழப்பு!
இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் பாகிஸ்தானுக்கு இரண்டே மாதங்களில் ரூ.123 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் விமானநிலையங்கள் நிர்வாகம் (பிஏஏ) ரூ. 123 கோடி இழப்பை சந்தித்துள்ளது. இதற்கான முக்கிய காரணம், இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் வெளியை பயன்படுத்த தடை விதித்ததுதான்.
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. இதன் எதிரொலியாக, ஏப்ரல் 24முதல் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து, ஒருநாளைக்கு 100 - 150 இந்திய விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக, விமான போக்குவரத்தும் 20 சதவீதம் வரை குறைந்ததால் பாகிஸ்தானுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருப்பதை பாகிஸ்தான் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அந்த வகையில், கடந்த ஏப்ரல் 24 தொடங்கி ஜூன் முடிய வரையிலான சுமார் இரண்டே மாதங்களில் பாகிஸ்தான் விமானநிலையங்கள் நிர்வாகம் (பிஏஏ) ரூ. 123 கோடி இழப்பை சந்தித்துள்ளது.