தெருநாய்களால் சோகம்! தேசியளவிலான தடகள வீரர் பலி!
ஒடிஸாவில் தெருநாய் கடித்து தேசியளவிலான மாற்றுத்திறனாளி தடகள வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஸாவில் கடந்த ஜூலை 23 ஆம் தேதியில், போலங்கிர் பகுதியில் பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளி தடகள வீரர் ஜோகேந்திர சத்ரியா (33) உள்பட 6 பேரை தெருநாய் ஒன்று கடித்தது.
இதனையடுத்து, தெருநாய் கடித்த 6 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சத்ரியாவும், ஹிருஷிகேஷ் ராணா (48) என்பவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் தெருநாய்கள் தொல்லை மற்றும் நாய்க்கடி தொடர்பான வழக்குகள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
கடந்தாண்டில் மட்டும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில்தான், நோய்வாய்ப்பட்டு சுற்றித் திரியும் தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசின் கால்நடைத் துறை அனுமதியளித்து, கடந்த மாதம் அரசாணை வெளியிட்டது.