``மாலை 6 மணிக்கு மேல் தனியார் அருவியாக மாறும் பழைய குற்றாலம்'' - விவசாய சங்கம் குற்றச்சாட்டு
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள பழைய குற்றால அருவியானது பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலும், அருவி அருகே உள்ள பகுதிகள் ஆயிரப்பேரி ஊராட்சி கட்டுப்பாட்டிலும் இருந்தது.
மேலும் தற்போது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்ற குழப்பம் நிலவுவதாக தமிழ்நாடு உறுதிமொழி குழு ஆய்வின்போது தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கடந்த வருடம் அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சிறுவன் உயிரிழந்ததை அடுத்து வனத்துறை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

இந்த நேர கட்டுப்பாட்டை பயன்படுத்தி வனத்துறை மற்றும் காவல் துறை இணைந்து ஆறு மணிக்கு மேல் பணம் வாங்கிக் கொண்டு குளிக்க அனுமதிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
இந்நிலையில், "நேற்று இரவு கட்டுப்பாட்டை மீறி 7.30 மணிக்கு மேல் 10-க்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அதிகாரிகளின் துணையோடு குளிப்பதற்கு சென்றனர். அவர்களுக்கு காவல்துறையும் சோதனை சாவடியை திறந்து வழிவிட்டனர்" என்று கூறிய விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவர்களை சிறைப்பிடித்து தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிலைமையை அறிந்து அங்கு வந்த உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினர் அங்கிருந்த விஐபிகளை வெளியேற்றுவதில் மட்டுமே கவனமாக இருந்தனர். அவர்களை அனுமதித்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் டேனி அருள் சிங், வேலுமயில் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், “நேற்று சொகுசு வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்ட போது காவல்துறையினரும் இருந்தனர். ஆனால் இது குறித்து புகார் கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது காவல்துறையின் அலட்சியத்தை காட்டுகிறது.
மேலும் பழைய குற்றால அருவியில் வனத்துறையினர் சோதனை சாவடி அமைத்து அங்கேயே சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்துவது வழக்கமாக உள்ளது. ஆனால் நேற்று இரவு அருவியின் அருகே வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான நடவடிக்கைகளால் மாவட்ட நிர்வாகம் முறையாக செயல்படுவதில்லை என்பதை காட்டுகிறது. எனவே பழைய குற்றால அருவி பணம் படைத்தவர்களுக்காக பயன்படும் நோக்கத்தை கைவிட வேண்டும். வழக்கம்போல 24 மணி நேரமும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். இல்லையெனில் அடுத்த கட்டமாக அனைத்துக் கட்சிகள் மற்றும் வியாபார சங்கங்கள் சார்பாக தடையை மீறி அருவியில் குளிக்கும் போராட்டம் நடைபெறும்" என்று அறிவித்துள்ளனர்.