அமெரிக்காவுக்கு அதிக ஸ்மார்ட்போன்களை அனுப்பும் நாடு இந்தியா!
அமெரிக்காவுக்கு அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து அனுப்பும் நாடாக இந்தியா உள்ளதாக மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு பேசிய அவர்,
''நாட்டில் மின்னணு பொருள்களின் உற்பத்தி, கடந்த 11 ஆண்டுகளில் 6 மடங்கு அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு ரூ. 12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் மின்னணு பொருள்களின் ஏற்றுமதியானது 8 மடங்கு உயர்ந்து, ரூ. 3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. உலகில் அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
2025 நிதியாண்டில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள மொத்த ஸ்மார்ட்போன்களில் 44% இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டவை. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 13% ஆக இருந்த நிலையில், தற்போது மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது.
சீனாவில் இருந்து அமெரிக்காவுக்குச் செய்யப்பட்டு வரும் இறக்குமதிகளில், பெரும்பாலானவை இந்தியாவில் இருந்து தற்போது செய்யப்பட்டு வருகிறது. 2014ஆம் ஆண்டில் இருந்த உற்பத்தி நிலையங்களை விட இரு மடங்கு அதிகரித்து தற்போது 300 ஸ்மார்ட்போன் உற்பத்தி நிலையங்கள் நாட்டில் உள்ளன.
அரசுத் தரவுகளின்படி, 2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் 26% உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. தற்போது அந்த எண்ணிக்கை 99.2% ஆக அதிகரித்துள்ளது.
2014 நிதியாண்டில் ஸ்மார்ட்போன்களுக்கான உற்பத்தி மதிப்பு ரூ. 18,900 கோடியாக இருந்த நிலையில், 2024 நிதியாண்டில் ரூ. 4.22 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது'' எனத் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையால், சர்வதேச சந்தையில் சமரசமற்ற வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும், உலகளாவிய தொழில்நுட்ப மையமாக இந்தியா மாறியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | உத்தரகண்ட் இயற்கை பேரிடர்: 10 ஆண்டுகளில் 3,500 பேர் பலி