ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா? -பிரதமர் மோடி சொன்ன விஷயம்
டிம் டேவிட், ஹேசில்வுட் அசத்தல்: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஆஸ்திரேலியா!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி டார்வினில் இன்று (ஆகஸ்ட் 10) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலியா முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 178 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழை பொழிந்த டிம் டேவிட் 52 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடித்தார். அவரைத் தொடர்ந்து, கேமரூன் கிரீன் அதிரடியாக 13 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். பென் துவார்ஷூயிஸ் 17 ரன்கள் எடுத்தார்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் குவெனா மபாகா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ககிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும், லுங்கி இங்கிடி ஜியார்ஜ் லிண்டே மற்றும் செனுரான் முத்துசாமி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
வெற்றியுடன் தொடங்கிய ஆஸ்திரேலியா
179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்க அணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் ரிக்கல்டான் 55 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 37 ரன்களும், லுஹான் டி பிரிட்டோரியஸ் 14 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பென் துவார்ஷூயிஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆடம் ஸாம்பா 2 விக்கெட்டுகளையும், கிளன் மேக்ஸ்வெல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்த டிம் டேவிட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இதையும் படிக்க: வெற்றி பெறுவோம் என தொடர்ந்து நம்பிக்கையளித்த முகமது சிராஜ்; மனம் திறந்த ஆகாஷ் தீப்!